Latest News

July 19, 2013

வடக்கின் நிலை இன்னும் மாறவில்லை : ஜீன் லெம்பட் கருத்து
by admin - 0


வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் காணப்படுவதால் பொருளாதார முதலீடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அதேவேளை, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமையே தற்போதும் அங்கு காணப்படுகின்றது என ஐரேப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஜீன் லெம்பட் தெரிவித்தார்.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இத்துடன் இலங்கைக்கு 7 ஆவது முறையாக விஜயத்தை மேற்கொண்டுள்ளது. இம் முறை இவ் விஜயத்தில் 6 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளோம்.

நாம் கடந்த காலங்களில் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டோம். குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கு சென்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.

அதேவேளை, நாம் இங்கு தங்கியிருந்த நாட்களில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன், சூழல் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மற்றும் பொருளாதார அபிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினோம். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற ஊறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.

இதேவேளை, நாம் நாட்டின் அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் கல்வி போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தினோம். குறிப்பாக வடக்கில் சிவில் நிர்வாகம் பெலிஸாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இராணுவத்தின் பிரசன்னம் பொதுவிடயங்கள் பலவற்றில் காணக்கூடியதாகவுள்ளது. இது இவ்வாறு போனால் நாட்டின் எதிர்கால பொருளாதார முதலீடுகளுக்கு பெரும் பாதிப்பாக அமையும்.

காணாமல் போனோர் தொடர்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமையே காணப்படுகின்றது. அது தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. இது முக்கியமான விடயமாகும். வடக்கில் பல குடும்பங்களின் உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளனர்.

வடக்கில் உட்கட்டுமான வேலைகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் அனைத்தையும் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் சுயாதீனமாகவும் நீதியாகவும் இடம்பெற வேண்டும். இங்கு தேர்தல் பிரசார வேலைகள் சுயமாக எவ்வித அழுத்தங்களுமின்றி இடம்பெற வேண்டும்.

இந்நிலையில், வடமாகாண சபைத் தேர்தலை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்கின்றது. நாம் தேசிய ரீதியிலான தேர்தலை மட்டுமே கண்காணிக்க முடியும். வடக்கு தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் எவ்வித கோரிக்கையும் எம்மிடம் முன்வைக்கப்படவில்லை.
« PREV
NEXT »

No comments