Latest News

July 28, 2013

கூட்டமைப்பின் வளர்ச்சியை சகிக்க முடியாது புலி முத்திரை குத்தி நசுக்கப்பார்க்கும் விஷமிகள் - பேராசிரியர் இராஜேஸ்வரன்
by admin - 0

தமிழ் மக்களின் இதயத்துடிப்பை சர்வதேச சமூகமும் இந்தியாவும் மீண்டும் ஒரு முறை தெளிவாக அறிந்து கொள்ள வடமாகாண சபை தேர்தல் களமமைத்துக் கொடுத்துள்ளது. ஆகவே, வட மாகாணத்தில் வாழும் சகல தமிழ் மக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னால் அணி திரண்டு எமது பலத்தை நிருபணம் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் தெரிவித்தார். சுய தொழில் முயற்சில் ஈடுபடுவோருக்கான உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் பேசுகையில்,

போர் உக்கிரமாக இடம்பெற்ற கால கட்டத்தில் விடுதலைப்புலிகள் ஆயுத பலமிக்கவர்களாக காணப்பட்டனர். அந்த சந்தர்பத்தில் தற்போதைய ஜனாதிபதி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தினை பதின்மூன்று பிளஸ் ஆக அதிகரித்து வழங்க வேண்டும் என்றும் மாகாண சபை முறைமையை பலமிக்க சபையாக மாற்ற வேண்டும் என்று பல சந்தர்பங்களில் கூறியதை நாம் மறந்துவிடவில்லை.

ஆனால் இன்று நடப்பது காணி, பொலிஸ் அதிகாரங்கள் அற்ற நிலையில் மாகாண சபைகள் குறைமாத குழந்தைகள் போல் உயிர் வாழ்கின்றன. இந்த குறை மாத குழந்தையையும் அழித்து விட வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஹெல உறுமய தலைவர்கள் வரிந்து கட்டிக்கொன்று உள்ளனர். இதிலிருந்து அரசின் உண்மையான வெட்டு முகம் என்னவென்று புலனாகின்றது.

வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தெரிவை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பக்குவத்துடன் முன்னெடுத்த வேளையில், அரச ஊடகங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேற உத்தேசம் என்றெல்லாம் பிரசாரம் செய்தனர். இவர்களின் பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா அவர்களை அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

இன்று தமிழ் மக்களுக்குள்ள ஒரேயொரு அரசியல் பலம் வாய்ந்த சக்தியாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் வளத்தையும் வளர்ச்சியையும் சகித்துக்கொள்ள முடியாதவர்கள் புலி முத்திரை குத்தி நசுக்கப்பார்க்கின்றனர். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவே புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அகிம்சை வழியில் தமது இனத்தின் அரசியல் உரிமையை பெற ஜனநாயக வழியில் உரத்து பேசுவதை எந்த வகையில் தவறாகும். நாம் எமது உரிமையையும் கடந்த காலங்களில் இழந்தவற்றையும் கேட்கின்றோம். எமது பூர்வீக நிலங்களை கபளீகரம் செய்ய முற்படுவதை தட்டிக்கேட்டு தடுத்து நிறுத்த முனைப்புடன் செயற்படுவது எந்த வகையில் பயங்கரவாதமாகும்.

இன்று வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு களமிறங்கி வரலாறு காணாத வெற்றியை உலகறிய வைக்கவுள்ளதென்ற அச்சத்தில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை முடிவுக்கு கொண்டு வர வட பகுதி தமிழ் உறவுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னால் அணி திரள வேண்டியது காலத்தின் தேவையாகும்.






« PREV
NEXT »

No comments