Latest News

July 11, 2013

மாவை சேனாதி­ராஜாவே வடக்கு முதலமைச்சராக வேண்டும்.-அரியநேத்திரன்
by admin - 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்! முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு இழுபறி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று மாலை 5மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.
தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சங்கையா, கிருஷ்ணபிள்ளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், கருணாகரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், க.சிவநேசன் (பவன்), ராகவன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் நியமனக் குழுவும், நிதிக்குழுவும் பிரச்சாரக்குழுவும் நியமிக்கப்பட்டது.
பின்பு முதலமைச்சர் வேட்பாளர் சம்பந்தமாக நீண்டநேரம் ஆராயப்பட்டது.
விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக வரவேண்டும் என்பதை இரா.சம்பந்தன் அவர்கள் மிகவும் ஆணித்தரமாக ஆதரித்து நின்றார்.
அதேவேளையில் மற்றைய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மாவை சேனாதிராஜா அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக வரவேண்டும் என்பதை ஆதரத்து தங்களுடைய கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக கூறினார்கள்.
இந்தப் பிரச்சினை இழுபறி நிலையை அடைந்ததால் ஒரு முடிவில்லாமல் கூட்டம் நாளைய தினம் வரை பிற்போடப்பட்டு;ளளது..
முதலமைச்சர் வேட்பாளராகக் களத்தில் குதிக்க நான் தயார்! – கூட்டமைப்பின் மாவை எம்.பி. தெரிவிப்பு
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், வடக்கில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டி­யிட தான் தயாராகவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தன்னை வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுமாறு கூட்டமைப்பின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்றும், வடக்கில் உள்ள புத்திஜீவிகளும், பொதுமக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குமாறு தன்னிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர் எனவும் மாவை எம்.பி. தெரிவித்தார்.
அத்துடன், தமிழ்க் கூட்டமைப்-பின் ஒருங்கிணைப்புக் குழுவின் இறுதி முடிவில்தான் எல்லாமே தங்கியுள்ளது என்றும், வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்புக் குழு இன்று கொழும்பில் கூடி முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.
வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சிரேஷ்ட அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவா அல்லது உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனா என்ற கேள்வி தற்போது இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியில் எழுந்துள்ள நிலையில் மாவை சேனாதிராஜா தனது நிலைப்பாட்டை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
தமிழ் மக்களின் விடுதலைக்காக என்னாலான பணிகளைச் செய்து வருகின்றேன். எத்தனையோ அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் குரல் கொடுத்து வருகின்றேன். இதற்காகச் சிறையும் சென்று மீண்டு வந்தேன். தந்தை செல்வாவின் அஹிம்சை வழிப் பாதையில் தமிழ் மக்களுடன் சேர்ந்து எமது இலட்சியத்தை அடையப் பயணிக்கின்றேன்.
இந்நிலையில், தமிழ்க் கூட்டமைப்பின் பெரும்பாலான எம்.பிக்கள், வடக்கு புத்திஜீவிகள், பொதுமக்கள் ஆகியோரின் வேண்டுகோளுக்கமைவாக வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட நான் தயாராகவுள்ளேன். எனினும், தமிழ்க் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு இன்று கொழும்பில் ஒன்றுகூடி எடுக்கும் முடிவில்தான் எல்லாமே தங்கியுள்ளது.
மேற்படிக் குழுவின் முடிவுக்கமைய என்னை வடக்கில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுமாறு கட்சியின் தலைமைப்பீடம் என்னிடம் வேண்டுகோள் விடுத்தால் நான் உடனே சம்மதம் தெரிவிப்பேன்.
கட்சி எந்தத் தீர்மானம் எடுத்தாலும் அதற்கு நான் உடன்படுவேன். நான் அனைவரையும் மதிக்கின்றேன் என்று தெரிவித்தார்.
நல்லூர் மட்டும்தான் விக்னேஸ்வரன் ஐயா; மூலைமுடுக்கெல்லாம் மாவை அண்ணன்! – கூட்டமைப்பின் தலைமைக்கு அரியம் MP அறிவுரை
விக்னேஸ்வரன் ஐயாவுக்கு வடக்கில் நல்லூர் கந்தன் ஆலயம் மட்டும்தான் தெரியும். ஆனால், மாவை அண்ணனுக்கு வடக்கு, கிழக்கின் மூலைமுடுக்கெல்லாம் தெரியும்.
எனவே, தமிழ்த் தேசியத்திற்காக அயராது பணியாற்றி வருபவரும், தமிழ்ச் சமூகத்தால் அதிகம் விரும்பப்படுபவருமான மாவை சேனாதிராஜாவை வட மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கக் கூட்டமைப்பின் தலைமை முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.
வடக்கு – கிழக்கு இணைப்­புக்­குப் பாலமாக இருக்கக் கூடியவர் மாவை சேனாதிராஜாவே என்றும் அவர் குறிப்பிட்டார்.
வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் சூடுபிடித்­துள்ள தற்போதைய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் மேற்கண்ட­வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
வடக்கு முதலமைச்சர் வேட்பாள­ருக்குரிய முழுத் தகுதியைக் கொண்­டவர் மாவை சேனாதிராஜா.
இவர் உறுதிமிக்க தலைவராக – நாடாளுமன்ற உறுப்பினராக வடக்­கில் அனைத்து இடங்களிலும் நின்று பணியாற்றி வருகின்றார். அதுமட்­டுமல்ல கிழக்கிலும் தன்னாலான பணிகளை இவர் செய்து வருகின்றார்.
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரத்திற்காக வடக்கிலிருந்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணிகள் மற்றும் ஆதரவாளர்களை அணி­திரட்டி கிழக்குக்கு அழைத்து வந்து மாபெரும் தேர்தல் பிரசார நடவ­டிக்கைகளில் ஈடுபட்டவர் மாவை சேனாதிராஜா.
முதலமைச்சராக வருபவர் ஆளுந­ருக்குத் தலையாட்டிப்பொம்மையாக இருக்கக்கூடாது. வெட்டொன்று துண்டிரண்டாகக் கதைக்கக்­கூடிய­வாரக இருக்கவேண்டும். அந்தத் திறமை மாவை சேனாதிராஜாவுக்கே உள்ளது.
தமிழ் மக்களை அணிதிரட்டி சிங்கள அரசுக்கும், அதன் படைக­ளுக்கும் எதிராகப் போராட்டம் நடத்­தக்கூடிய வல்லமை அவரையே சாரும். வடக்கில் வாழ்வுரிமைப் போராட்­டங்கள் நடைபெறும்போது களத்தில் இவரின் குரல்கள் விண்ண­திர ஒலிக்கும்.
அச்சுறுத்தல்களுக்கு அடிபணி­யாமல் பணியாற்றி வருபவராகவும், தமிழினத்தின் எதிரிகள் மற்றும் துரோகிகளின் தாக்குதலுக்குள்ளாகி விழுப்புண் அடைந்தவராகவும், தமிழருக்காக சிறை சென்று மீண்டு வந்தவராகவும் மாவை சேனாதிராஜா திகழ்கின்றார்.
விக்னேஸ்வரன் ஐயாவுக்கு வடக்­கில் நல்லூர் கந்தன் ஆலயம் மட்­டும்தான் தெரியும். ஆனால், மாவை அண்ணனுக்கு வடக்கு, கிழக்கின் மூலைமுடுக்கெல்­லாம் தெரியும்.
விக்னேஸ்வரன், சிறந்த நீதியர­சராக இருந்துள்ளார். அதேவேளை, அவர் ஆன்மீகவாதியாகவும் உள்ளார். அவரை நான் மதிக்கின்றேன். ஆனால், அவரின் குடும்ப சூழ்நிலை கேள்விக்குறியாகவுள்ளது.
அவரின் குடும்பம் சிங்களப் பேரினவாதத்­தோடு இரண்டறக் கலந்துள்ளது. அதாவது அவரின் இரு பிள்ளைகளும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்­களையே திருமணம் செய்துள்ளார்­கள். இதனால்தான் அவரின் குடும்­பம் மீது எனக்கு மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்திற்கே சந்தேகம் எழுந்துள்­ளது.
அம்பாறையில் தமிழ்க் கூட்ட­மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு நிகழ்ந்த சம்பவம் விக்னேஸ்வர­னுக்கும் ஏற்படக்கூடும்.
தாய் வழி மூலம் சிங்களப் பேரினவாதத்தோடு கலந்திருந்த பியசேன, இறுதியில் தமிழ்க் கூட்­டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான பின்னர் அரசால் மூளைச்­சலவை செய்யப்பட்டு மாற்றப்பட்டார். இதே நிலைமை விக்னேஸ்வரனுக்கும் வராமல் இருக்க முடியும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
சட்டத்துறையை வைத்துக்­கொண்டு முதலமைச்சர் வேட்பா­ளரை தமிழ்க் கூட்டமைப்பின் தலைமை தெரிவு செய்யக்கூடாது. தமிழ் மக்களுடன் சேர்ந்து பணி­யாற்றக்கூடிய மாவை சேனாதி­ராஜாவே வடக்கு முதலமைச்சராக வேண்டும்.
இவரே வடக்கு – கிழக்கு இணைப்­புக்குப் பாலமாக இருக்­கக்கூடியவர். எதிர்காலத்தில் பாரிய சவால்கள் வரும்போது அதற்கு முகம்­கொடுக்கக்கூடியவர் மாவை சேனா­திராஜாவே.
கொழும்பில் இருப்பவர்களின் கருத்தை வைத்துக்கொண்டு வடக்கு முதலமைச்சர் வேட்பாளரை கூட்ட­மைப்பு தெரிவுசெய்யக்கூடாது. வடக்கில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்த்து முதலமைச்சர் வேட்பாளரை கூட்டமைப்பு தெரிவுசெய்ய வேண்டும்.
விக்னேஸ்வரன் அண்மைக் காலமாக “அரசியலுக்கு வரமாட்டேன். முதலமைச்சர் பதவியை நான் விரும்பியதும் இல்லை; கேட்டதும் இல்லை” – என்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்துத்தான் மாவை சேனாதிராஜாவை வடக்கு முதலமைச்சராகக் களமிறக்க தமிழ்க் கூட்டமைப்பின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்ச் சமூகத்தினரும் தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில், விக்னேஸ்வரனின் முன்னைய நிலைப்பாட்டில் தற்போது மாற்றங்களை ஏற்படுத்தி கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
எனவே, மாவை சேனாதிராஜாவை கூட்டமைப்பின் வடக்கு முதலமைச்சராகக் களமிறக்காவிட்டால் அது கட்சிக்கும் நல்லதல்ல; கட்சித் தலைமைக்கும் நல்லதல்ல; ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் நல்லதல்ல.
எனவே, தமிழ்த் தேசியத்திற்காக அயராது பணியாற்றி வருபவரும், தமிழ்ச் சமூகத்தால் அதிகம் விரும்­பப்படுபவருமான மாவை சேனாதி­ராஜாவை வட மாகாணசபைத் தேர்­தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கக் கூட்டமைப்பின் தலைமை முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்.
« PREV
NEXT »

No comments