Latest News

July 17, 2013

வடக்குத் தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறி; மாவையிடம் வவுனியா தமிழ்ச் சமூகம் ஆதங்கம்
by admin - 0

"வடக்கு முதலமைச்சராக நீங்கள் வரவேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். ஆனால், முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை நியமிக்க கட்சியின் தலைமை தன்னிச்சையாக எடுத்துள்ள தீர்மானத்தால் வடக்குத் தமிழரின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. முதலமைச்சர் விடயத்தில் கட்சியின் தலைமை தன்னிச்சையான முடிவை எடுக்க ஏன் நீங்கள் விட்டுக்கொடுத்தீர்கள்?'' என்று மாவை சேனாதிராசாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள் வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியினரும், புத்திஜீவிகளும். கொழும்பிலிருந்து நேற்றுக் காலை வவுனியா சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமிழரசுக் கட்சிகளின் உறுப்பினர்கள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்தனர். இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இதன்போது அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: மக்கள் விரும்புவர்களையே கட்சியின் தலைமை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டும். ஆனால், உங்களை (மாவை சேனாதிராசா) முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்குமாறு நாம் வலியுறுத்தி வரும்போது கட்சியின் தலைமை தலைகீழான முடிவை எடுத்துள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க கட்சியின் தலைமை எடுத்துள்ள தீர்மானத்துள்ளதால் வடக்கு தமிழரின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, முதலமைச்சராக தாங்கள் வரவேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். யாழ். மக்களும் இதனையே விரும்புகின்றனர். எனவே, கட்சியின் தலைமை எடுத்துள்ள முடிவில் உடனடி மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். முதலமைச்சர் விடயத்தில் கட்சியின் தலைமை தன்னிச்சையான முடிவை எடுக்க ஏன் நீங்கள் விட்டுக் கொடுத்தீர்கள்?'' என்று தெரிவித்தனர். மக்களின் கருத்துக்களுக்கு மாவை சேனாதிராசா பதிலளிக்கும்போது, "கட்சியின் தலைவரும் செயலாளருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்படக்கூடாது; கட்சிக்குள் ஒற்றுமை இருக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே எனது நிலைப்பாட்டில் அந்நேரம் மாற்றத்தை ஏற்படுத்தினேன். ஆனால், மக்களின் உணர்வை இப்போது நான் நன்றாகப் புரிந்துகொள்கின்றேன். எனக்குப் பின்னால் இந்தளவு மக்கள் வெள்ளம் அணிதிரண்டு நிற்பதைக் கண்டு நான் மகிழ்வடைகின்றேன். எனினும், உங்களின் கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை என்பதையிட்டு நான் கவலையடைகின்றேன்'' என்று தெரிவித்துவிட்டு நேற்று மதியம் அங்கிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டார். யாழில் இன்று தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், யாழ். பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மாவை சேனாதிராசாவுடன் முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர் எனத் தெரியவருகின்றது.
« PREV
NEXT »

No comments