1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இவ் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வு எதிர்வரும் ஜூலை மாதம் 23ம் திகதி பிற்பகல் 4 மணியிலிருந்து 7 மணிவரை, பிரித்தானிய பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ வதிவிடமான 10 Downing street முன்பாக பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் கார்த்திகை மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் இளவரசர் சாள்ஸ் ஆகியோர் கலந்துகொள்வதற்கெதிராக அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இலங்கையில் தமிழர் தாயக பகுதிகளில் திட்டமிட்ட இனவழிப்பு, இராணுவமயப்படுத்தல், பௌத்தமயப்படுத்தல் மற்றும் காணி அபகரிப்பு போன்றவை சிங்கள இனவாத அரசினால் துரித கதியில் தொடரப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அதனைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இவ் ஆர்ப்பாட்ட நிகழ்வு நடைபெறும்.
எமது மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை சர்வதேசத்தின் கவனத்திற்கு நாம் ஓயாது தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருத்தல் காலத்தின் கட்டாயம். இவ் விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே பிரித்தானிய தமிழர் பேரவை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது .
எங்கள் மக்களின் வலிகளை பதிவு செய்யும் இவ்நிகழ்வில் அனைத்து புலம் பெயர் வாழ் உறவுகளையும் கலந்து கொண்டு உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துமாறு பிரித்தானியத் தமிழர் பேரவை வேண்டிக் கொள்கிறது.
No comments
Post a Comment