Latest News

June 11, 2013

ஈழதேசம் இணையத்தை நிர்மூலமாக்க தீவிர சதி!
by admin - 0

விழித்து எழுந்தவுடன் கிடைப்பது அல்ல வெற்றி வீழ்ந்து எழுந்தவுடன் கிடைப்பது தான் வெற்றி என்பதை ஒவ்வொருதடவையும் நிரூபித்து இணையப்பணியாற்றிவரும் ஈழதேசம் இணையம் எட்டாவது முறையாக தொடர் சதிமுயற்சியில் தாக்குண்டுள்ளது.
எட்டாவது முயற்சியிலாவது தமது இலக்கை எப்படியாவது எட்டிப்பிடித்துவிட வேண்டும் என்பதில் சதிகாரர்கள் தீவிரமாக இருப்பதை தற்போதைய நொடிப்பொழுது கூட தொடர்ந்துவரும் நாசவேலைகள் உறுதிப்படுத்துகின்றன.
தமிழ் மொழியானது இன்று எம்மவர்களது வேற்று மொழி மோகத்தினால் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் அதில் இருந்து தடுத்து நிறுத்தி வளர்ச்சிப்பாதையில் தமிழ் மொழியை வழிநடாத்திக் கொண்டிருக்கும் முக்கிய இடத்தில் தமிழ் இணையங்கள் செயற்பட்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழ் இணையங்கள் அதிகளவான பார்வையாளர்களை தம்மகத்தே கொண்டு இந்த பணியை செவ்வனே செய்து வருகின்றமை பெருமைக்குரியவிடையமாகும்.
இன்றைய உலகில் உண்மையை விட போலிகள் தான் அதீத கவர்ச்சி கொண்டதாகவும் மக்களை உடனடியாக ஈர்க்கும் தன்மை கொண்டதாகவும் உலவி வருகையில் தமிழ் இணையங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
தமிழீழ விடுதலைப் பயணத்தில் புலம்பெயர் தமிழர்கள் எவ்விதம் தவிர்க்க முடியாதவர்களோ அந்தளவிற்கு சில தமிழ் இணையங்களது பங்களிப்பும் கடந்த காலங்களிலும் தற்போதும் தவிர்க்க முடியாததாக இருந்து வந்துள்ளது வருகின்றது.
முன்னர் சில தமிழ் இணையங்கள் களத்தில் புலிகள் பலம்பெற்று இருந்த காலப்பகுதியில் முக்கியத்துவம் பெற்று தமிழீழ விடுதலைப் புலிகளது உத்தியோக பூர்வ இணையத்தளங்கள் எனக் கருதுமளவிற்கு செயற்பட்டுவந்தமையும் முள்ளிவாய்காலின் பின்னரான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமான செயற்பாட்டில் ஈடுபட்டு தாமாக தமது முகத்திரையினை உலகத் தமிழர்களது முன்நிலையில் கிழத்து கந்தலாகி காணாமல் போயிருந்தனர் என்பது யாவரும் அறிந்ததே.
தற்போதும் அவை வேறு பெயர்களில் புதுப்புது அவதாரம் எடுத்து ஈழவிடுதலைக்கும் ஒன்றுபட்ட செயற்பாட்டிற்கும் குந்தகம் விளைவித்தும் எதிரிகளின் கைப்பாவையாக செயற்பட்டுவருவதும் நடைபெற்று வருகையில் விரல் விட்டு எண்ணத்தக்க இணையங்கள் வலுவான தளத்தில் பயணித்து வருகின்றது சற்று ஆறுதலான விடயமாகும்.
தமிழீழ விடுதலைக்கான பயணத்தில் எவ்வித விட்டுக் கொடுப்புகளிற்கும் இடம்கொடுக்காது தமிழீழத் தேசியத் தலைவர் காட்டிய பாதையில் மாவீரர்களது தியாகத்தை மனதில் நிறுத்தி தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற கோட்பாடுகளின் வழிநின்று தமிழ் இணைய உலகில் பயணத்தை தொடர்ந்து வரும் ஈழதேசம் இணையம் மீண்டும் எதிரிகளின் இணையவழித் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.
இதேபோன்று இரண்டு வருடங்களிற்கு முன்னர் புதிய உத்திகளுடன் கையாளப்பட்ட முற்றுகைக்குள் எமது இணையம் அகப்பட்டது. கடந்த 11-06-2011 அன்று ஐரோப்பிய நேரம் மதியத்தில் இருந்து பகுதி பகுதியாக இணையத்தளம் பார்வையிட முடியாதவாறு முடக்கப்பட்டு பிற்பகல் அளவில் முழுமையாக உலகெங்கும் பார்வையிட முடியாதளவிற்கு சதிச்செயல் அரங்கேற்றப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலையடுத்து அப்போது இணைய சேவையை வழங்கும் நிறுவனத்தினரால் கடுமையான ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. தயவுசெய்து வேறு இணைய சேவை நிறுவனங்களை நாடி உங்கள சேவையை தொடருங்கள் என ஆலோசனை வழங்க்கப்பட்டது.
தமது இணையசேவை நிறுவனத்தின் மூலம் பயண்பாட்டில் இருப்பவர்களது சேவையையும் பாதிக்கும்வகையில் இந்த தாக்குதல் முயற்சி தீவிரமாக இருந்ததால் எமக்கான இணையசேவையை துண்டித்துவிட்டார்கள். அதன் பின்னர் வேறுஒரு இணைய சேவை வழங்குநர்கள் மூலம் எமது செயற்பாட்டை தொடரவேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது எட்டாவது முறையாக கடந்த இரண்டாம் திகதி மாலைமுதல் இணையத்தளம் முடக்கப்பட்டிருந்த நிலையில் ஆரம்பகட்ட சதிமுயற்சி முறியடிக்கப்பட்டு அடுத்த தினத்தில் இருந்து வழமைபோல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.இருந்தாலும் சதிகாரர்கள் தொடர்ந்தும் வெளித்தெரியாத பல கைங்கரியங்களில் ஈடுபட்டுவருவதை நாம் அறிந்து அதனை தடுப்பதற்காக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுவரும்நிலையில் இன்று(10-06-2013) அநாமதேய நபர் ஒருவர் எமது இணையசேவை வழங்கும் தளத்திற்குள் ஊடுருவியுள்ளதை கண்டறிந்துள்ளோம்.
இதன் வெளிப்பாடாக செய்திகள் தரவேற்றம் செய்வதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. அதனை இணைய வாசகர்களாகிய நீங்கள் கண்டிருப்பீர்கள். ஒருவாரமாக ஓயாது நடைபெற்றுவரும் சதிமுயற்சியானது ஈழதேசம் இணையத்தை நிர்மூலமாக்கி நிரந்தரமாக இணைய உலகில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான சதிமுயற்சியாகவே எம்மால் பார்க்கப்படுகின்றது.
இணைய வாசகர்களிற்கு ஓர் வேண்டுகோள்.
உலகின் பல நாடுகளில் இருந்தும் பல்வேறு இணையவழித்தடங்களின் மூலம் எமது இணைய சேவையை பார்வையிடும் வாசகர்கள் எதிர்கொள்ளும் தடங்கல்கள் குறித்து எமக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிச்சயமாக எல்லோரது எதிர்பார்ப்பினையும் ஈடு செய்யும் வகையில் தடைகளை தாண்டி ஈழதேசம் இணையம் உலகத் தமிழர் இணைய உலகில் மீண்டும் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் கிலிகொடுக்கும் விதமாக உறுதியுடன் மாவீரர்களது சத்திய வாழ்வினை பாதையாக கொண்டு தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது வழிகாட்டுதலில் ஒளிர்வோம். இது சத்தியம்.
விழித்து எழுந்தவுடன் கிடைப்பது அல்ல வெற்றி!
வீழ்ந்து எழுந்தவுடன் கிடைப்பது தான் வெற்றி!!
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஈழதேசம்
இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்(10-06-2013)
-ஈழதேசம் இணையம் இது ஈழம் அமைக்கப் பயணம்.
« PREV
NEXT »

No comments