
டெல்லியில் நாளை நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் தலைமையிலான முதல்வர்கள் மாநாடு, ஆண்டுதோறும் நடைபெறும் சம்பிரதாய சடங்காகிவிட்டதாக கூறியுள்ளார்.
நிர்வாகத்தில் மத்திய அரசுக்கு சமமான பொறுப்புள்ள, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களின் கருத்துகளுக்கு இதுபோன்ற மாநாடுகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாநாட்டு முடிவுகளை மத்திய அரசு முன்கூட்டியே தீர்மானித்துவிட்டு, முதல்வர்களை வெறும் ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், ஒவ்வொரு முதல்வரும் 10 நிமிடம் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவதாகக் கூறியுள்ள அவர், கடந்த டிசம்பரில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பாதியிலேயே பேச்சை நிறுத்துமாறு தமக்கு அறிவுறுத்தப்பட்டதை நினைவுகூர்ந்துள்ளார்.
ஆகவே, டெல்லியில் நாளை நடைபெறும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முதல்வர்கள் மாநாட்டில் தமக்குப் பதிலாக, தமிழக சட்டத்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி பங்கேற்பார் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment