Latest News

May 08, 2013

இடம்பெயர்ந்தோர் நிலையில் முன்னேற்றம் இல்லை' - நோர்வே
by admin - 0

நோர்வே அகதிகள் கவுன்சிலும், ஐ.டி.எம்.சி எனப்படும் உள்நாட்டு இடம்பெயர்வைக் கண்காணிக்கும் மையம் என்ற அமைப்பும்
சேர்ந்து வெளியிட்டுள்ள உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த
அறிக்கையில் இலங்கையில் போரினால்
உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தோரின் நிலை இன்னும் முன்னேறவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. 2012 இறுதிவாக்கிலான , இலங்கை உள்நாட்டு இடம்பெயர்ந்தோர் நிலவரம்
குறித்து சொல்கிறது நோர்வே அகதிகள் கவுன்சிலின் இந்த அறிக்கை. விடுதலைப்புலிகள் அரச படைகளால்
தோற்கடிக்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கும் மேலான அந்த காலகட்டத்தில்,
இலங்கையில் சுமார் 93,000 பேர் அகதி முகாம்கள், உறவினர்கள்
அல்லது நண்பர்களின் வீடுகள் மற்றும் இடம்விட்டு இடம் மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலை ஆகிய நிலைகளில்தான் இருக்கிறார்கள்
என்று இந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் மக்களின் நிலங்களை இராணுவம் ஆக்ரமித்த காரணத்தால், சுமார் 26,000 பேர் இன்னும் தங்கள் சொந்த
இடங்களுக்கு திரும்ப முடியவில்லை என்றும் அது கூறுகிறது. மீள்குடியோருக்கும் பிரச்சினை சொந்த இடங்களுக்கு திரும்பியவர்களும்
தங்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளான, இருப்பிடம், குடிநீர் , சுகாதாரம் போன்றவைகளைப் பெறமுடியாத சூழ்நிலை இருப்பதாக அந்த அறிக்கை கூறியது. திரும்பியவர்களுக்கு தேவைப்படும் வாழ்வாதார உதவி, சமூக சேவை உதவி , சட்ட உதவி மற்றும் போரின் பாதிப்புகளிலிருந்து மீள உளவியல் ரீதியான மற்றும் சமூக ரீதியிலான உதவிகள் போன்றவைகள் அவர்களுக்கு போதிய அளவு கிடைக்கவில்லை என்றும் அது கூறுகிறது. இன்னும் அகற்றப்படாத நிலக்கண்ணி வெடிகள் மற்றும் பிற வெடிபொருட்கள் மக்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்கு வருவதை சிக்கலாக்கின. கடந்த
ஆண்டு இறுதி வாக்கில் இன்னும் 108 சதுரகிலோமீட்டர் பரப்பளவில்
நிலக்கண்ணி வெடி அகற்றல் பணிகள் நடக்கவேண்டியிருந்தது. வடக்கிலிருந்து இராணுவப் பிரசன்னம்
குறைக்கப்பட்டு , நிர்வாகப்
பொறுப்புகளிலிருந்தும் இராணுவம்
அகற்றப்படவேண்டும் என்று அரசு நியமித்த
நல்லிணக்க ஆணையம் கூறியிருந்தும், கடந்த uஆண்டு இறுதிவரை கூட இது நடக்கவில்லை; மேலும், வடக்கே சிவில் நிர்வாகம் செய்யவேண்டிய
பல கடமைகளை இராணுவம்
தொடர்ந்து செய்து வருகிறது என்றும்
அது கூறியது. பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக நிதி யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களும் இதே நிலையில் தான் உள்ளனர். அவர்களில் பலர்
யாழ்ப்பாணத்துக்கு திரும்பியும்,அங்கு நிலையாக வாழ்க்கை நட்த்த தேவையான
உதவியின்மை மற்றும் உள்ளூர் சமூகத்துடன் இணைந்து வாழ நிலவும்
தடங்கல்கள் ஆகியவற்றால், புத்தளத்திலும் வசிப்பது, யாழ்ப்பாணத்திலும்
இருப்பது என்ற இருநிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறுகிறது இந்த அறிக்கை. இலங்கை உள்நாட்டில்
இடம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக இன்னும்
ஒரு சட்டமும் இயற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை,
இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வைத்த ஒரு சட்ட
முன்வரைவு அரசால் முன்னெடுக்கப்படவில்லை என்று கூறுகிறது. இன மோதலின் மையமாக இருந்த விஷயங்களில் ஒன்றான
காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. சிக்கல் நிறைந்த வீடு,
நிலம் மற்றும் சொத்துப் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு காண எந்த
ஒரு கொள்கையும் வகுக்கப்படவில்லை. மேலும் இலங்கை அரசின் வரவு செலவுத் திட்டத்தில், போரினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் உதவிகள் தரும் அமைச்சகங்களுக்கு வழங்கும் நிதி ஒதுக்கீட்டைவிட, பாதுகாப்பு அமைச்சுக்கும், கட்டமைப்பு வசதிகளுக்குமே அதிக
நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
« PREV
NEXT »

No comments