Latest News

May 13, 2013

நாகராஜசோழன் எம்.ஏ எம்.எல்.ஏ - விமர்சனம்
by admin - 0

ஒரு கேடுகெட்ட அரசியல்வாதிக்கு தன் மகனே ஆப்பு வைக்கும் அதிரடிப் படம் தான் அமைதிப்படை. நாகராஜசோழன் எம்.ஏ எம்.எல்.ஏ. (அமைதிப்படை-2) படத்திலும் அதே கதையமைப்பு தான். அரசியலைப்பற்றி அதேவிதமான சரவெடி வசனங்களை அள்ளிவீசி இருக்கிறார் இயக்குனர் மணிவண்ணன்.

வாரிசு அரசியல், அரசியல் கொலைகள், உட்கட்சி விவகாரம், கட்சி தாவுதல், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது, கட்சித் தலைமைக்கே ஆப்பு வைப்பது, என எல்லா விஷயங்களும் இந்தப்படத்தில் இருக்கிறது. ஒரு மலைப்பகுதியை வெள்ளைக்கார வியாபாரிகளிடம் விற்பதற்கு பேரம்பேசுகிறார் முதலமைச்சர். அந்த மலைவாழ் மக்களின் வலிகளையும், போராட்டத்தையும் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அமைதிப்படை படத்தில் வந்த நாகராஜசோழன் கேரக்டர் இதிலும் தொடர்கிறது. சிறையில் இருக்கும் நாகரஜாசோழனை கட்சித்தலைமை பகைத்துக்கொள்ள, முதலமைச்சரின் ஊழல் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று போலீசை மிரட்டுகிறார் நாகராஜசோழன். சிறையில் இருந்து வெளியே வந்ததும் கட்சித்தலைமையை மிரட்டி துணைமுதல்வர் பதவியில் அமர்கிறார் நாகராஜசோழன். பிறகு... வழக்கமான அலப்பறைகள் தொடர்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமான புள்ளியாக இருக்கும் நாகராஜசோழன் தன் மகனை ஒரு இந்திய அரசியல்வாதியாக்க கனவுகாண்கிறார். ஆனால், அவரது மகனோ ஒரு ஏழை பெண்ணை காதல் திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்துகிறார். வெள்ளைகாரன் தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்க அவனுக்கு ஒரு காட்டுப்பகுதியை கொடுக்க நாகராஜழோழன் முடிவெடுக்கிறார். அதில் ஒரு பெரிய அமௌண்டை கொள்ளையடிக்கலாம் என்பது அவரின் கணக்கு. ஆனால், சில நேர்மையான அதிகாரிகள் அதற்கு சம்மதிக்காததால், அவர்களை தீர்த்துக்கட்ட, பிரச்சனை பெருசாகிறது.


எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைபேசி தன் கட்சிக்குள் சேர்த்துக்கொண்டு, தன்னை முதலமைச்சராக்கும் படி கட்சித்தலைமைக்குச் செக் வைக்கிறார் நாகராஜசோழன். பிறகென்ன மலைவாழ் மக்களின் போராட்டங்கள் பலனளிக்காமல் அவர்கள் போலீசால் சிறைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களை வழிநடத்திய சீமான் போராட்டத்தைக் கைவிடவேண்டிய சூழல் வருகிறது. ஆடிய ஆட்டங்களெல்லாம் அடங்கிவிட, தன் சொந்த மகனே நாகராஜசோழனுக்கு சூன்யம் வைக்கிறார். இதற்கிடையில நாகராஜசோழன் என்கிற அம்மாவாசயும் மணிமாறன் என்கிற மணியனும் அடிக்கிற லொள்ளு இருக்கே... அதே எனர்ஜி - அதே டைமிங்! பிண்ணிட்டாங்களே...! சீரியசான விஷயங்களை காமெடியோடு போறபோக்கில் அடித்துவிடுவது மணிவண்ணனுக்கே உரிய ஸ்டைல். சி.எம் முதல் பி.எம் வரை ஒருத்தர கூட விட்டுவைக்காம,சும்மா...கலாய்ச்சுட்டாங்களே!

தன் வில்லத்தனமான நடிப்புக்கு வேறுயாரும் நிகரில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் சத்யராஜ். மணிவண்ணனும் அதே குசும்போட இருக்கிறார். படத்தில் சில பிரம்மாண்ட காட்சிகள் இருந்தாலும், இவங்க இருவரும் லொள்ளு செய்கிற காட்சிகள் தான் அசத்தலாக இருக்கிறது. சீமான் அரசியல் மேடைகளில் பேசுகிற அதே உணர்ச்சியுடன் படத்திலும் பேசி நடித்திருக்கிறார். படத்தில் மலைவாழ் மக்களின் வலிகளை நாம் புரிந்துகொண்டாலும், அதைக் காட்சிப்படுத்திய வித்தில் ஒரு செயற்கைத்தனம் இருந்தது. திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக அமைத்திருக்க முடியும். காட்சிகள் துண்டு துண்டாக இருப்பது படத்தின் மைனல். ஆனால் மேக்கிங்கில் இளைய இயக்குனர்களோடு போட்டி போட்டிருக்கிறார். டி.ஷங்கரின் தரமான ஒளிப்பதிவு பாராட்டுக்குறியது. ஜேம்ஸ் வசந்தனின் இசை சுமாரானது என்றே சொல்ல முடியும். பின்னணி இசையை கொஞ்சம் ஜாக்கிரத்தையாகவே கையாண்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.அமைதிப்படை முதல் பாகத்தை மிஞ்ச முடியாது என்றாலும், அந்தப்படத்தைப் பார்க்காதவர்களும் இந்த நாகராஜசோழனை பார்த்து ரசிக்க முடியும் என்பது நிச்சயம். சரவெடி வசனங்களில் சில... 
சத்யராஜ் : இந்த தேர்தல்ல என்ன இலவசமா கொடுக்கலாம்? 

மணிவண்ணன் : மிக்சி கொடுத்தாச்சுங்ண்ணா... கிரண்டர் கொடுத்தாச்சுங்ண்ணா... டி.வி கொடுத்தாச்சுங்ண்ணா... ஆனா, ஜனங்க பாவம் கரண்டு இல்லாமதாங்ண்ணா கஷ்ட்டப்படுறாங்க. அதனால் வீட்டுக்கு ஒரு ஜனரேட்டர் இலவசமா கொடுக்கலாம். 

----------------

சத்யராஜ் : மணியா... இந்தா... அவன சுட்டுத்தள்ளு 
மணிவண்ணன் : அட, எனக்கு சுடத்தெரியாங்கண்ணா... 

சத்யராஜ் : நீ எப்ப இதெல்லாம் பழகுறது?

 மணிவண்ணன் : கைநடுக்கதுல உங்கள சுட்டாலும் சுட்டுடுவேன் 

சத்யராஜ் : நீ செஞ்சாலும் செய்வ. துப்பாக்கிய குடு. 
---------------- 
சத்யராஜ் : என்னய்யா நடக்குது 

மத்திய அமைச்சர் : அண்ணா, என் கையில எதுவும் இல்ல. சட்டத்த மீறி என்னால எதுவும் செய்ய முடியாது 

சத்யராஜ் : அமைச்சரே, உங்கள நான் ஜெயிக்க வச்சதே சட்டத்த மீறித்தான். மறந்துட்டீங்களா 
----------------
 எதிர்கட்சித்தலைவர் : என் கிட்ட 17 எம்.எல்.ஏ இருக்குறாங்க தலைவரே. அதுவும் போன தேர்தல்ல உங்ககூட கூட்டணிவச்சு ஜெய்யிச்சதுதான் 

சத்யராஜ் : அத வச்சுக்கிட்டு தானே சட்டசபையில ’ஏய்’ அப்படின்னு சவுண்டு கொடுக்குற 
----------------

 சீமான் : மரமெல்லாம் வெட்டியாச்சுன்னா, மலை எங்க இருக்கும். மழை வந்து மண்ணெல்லாம் போய் வெறும் பாற தான் இருக்கும் 

ஜெகன் : அப்போ பாற தான் மிஞ்சுமா 

சீமான் : அதத்தான் வெட்டி வித்துடறாங்களே, கல்குவாரி கேள்விப்பட்டதில்ல 

ஜெகன் : அப்போ, வெறும் தர தான் மிஞ்சுமா 

சீமான் : அதையும் தான் ஃப்ளாட் போட்டு விட்துடறாங்களே 

இன்னும் படத்தில் எவ்வளவோ இருக்கு...!
« PREV
NEXT »

No comments