Latest News

May 05, 2013

புலம்பெயர் தமிழர்களின் முன்னெடுப்பு உற்சாகமளிக்கின்றது: தமிழீழ சுதந்திர சாசனம் குறித்து செல்வம் அடைக்கலநாதன் கருத்துரை!
by admin - 0

இலங்கையில் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாகியிருப்பதோடு பல அழுத்தங்களை சந்தித்து வரும் நிலையில் தாயகத் தமிழர்களின் குரலாக புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் உற்சாகமளிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரினதும் பங்கெடுப்புடன் உருவாகி வரும் தமிழீழ சுதந்திர சாசனம் குறித்து கருத்துரைக்கும் போதே இக்கூற்றினை அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலையினை நோக்கிய செயற்பாட்டை மிகத்திறமையாக புலம்பெயர் உறவுகள் முழுமூச்சாக செய்து கொண்டிருக்கின்றார்கள் எனத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சிறிலங்கா அரசு அச்சப்படுகின்ற ஓர் சக்தியாக புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவேந்தும் தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18ம் நாளன்று தமிழீழ சுதந்திர சுதந்திர சாசனம் முரசறையப்பட இருக்கின்ற நிலையில் இக்கருத்து வெளிவந்துள்ளது.

சுயர்நிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆளுகின்ற வகையிலான அரசியல் அபிலாசையினை வென்றடைவதற்கான வழிமுறையாக புலம்பெயர் வாழ் தமிழர் சக்தியே அழுத்தங்களை சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தமிழகம் - மலேசியா என உலகத் தமிழர்களின் சக்திகள் ஒன்றிணையும் போது விடுதலையினை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதென தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுயநிர்ணய கோட்பாட்டு அடிப்படையில் உரிமையினை நிலைநாட்டுவதற்கான புலம்பெயர் தமிழ் மக்களின் முயற்சிக்கு பாராட்டுதல்களை தெரிவிப்பதோடு இம்முன்னெடுப்புகள் வெற்றிபெற தனது வாழ்த்துகளையும் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தீவில் தமிழீழம் என்ற சொல்லினையே வெளிப்டையாக சொல்லவோ அல்லது எழுதவோ முடியதாக சிங்கள பேரினவாக அரசின் இறுக்கமான நிலைக்குள் நின்று கொண்டு தமிழீழ சுதந்திர சாசனம் குறித்து இக்கருத்து வெளிவந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments