Latest News

May 05, 2013

எந்த விசாரணைக்கும் அஞ்சோம் - மாவை சேனாதிராசா
by admin - 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீண்டும் விசாரணை என்ற பெயரில் அரசின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார். எந்த விசாரணைக்கும் அவரோ, நாமோ அஞ்சி ஒளிந்து கொள்ளத் தேவையில்லை.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நான்காவது தடவையாக நான்காம்
மாடிக்கு, விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பது குறித்து தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரான மாவை. சேனாதிராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை நாளும் பொழுதும் விசாரணை என்ற பெயரில் அழைப்பதானது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கடமையைச் செய்வதைத் தடுப்பதற்கு ஒப்பானதாகும். நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு மனிதர் என்ற முறையில் தொடர்ச்சியான மன உளைச்சலை ஏற்படுத்துவது மட்டுமல்ல அவரையும் ஜனநாயக ரீதியில் அவரைத் தெரிவு செய்த மக்களின் ஜனநாயக உரிமைகளையும், ஜனநாயக அடிப்படை உரிமைகளையும் மீறும் செயலாகும். அரசின் உளவுத்துறை மக்களை மட்டுமல்ல ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களது கடமையைச் செய்வதைத் தடுப்பதற்கு பயன்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கிளிநொச்சியில் மட்டுமல்ல வடக்கு, கிழக்கு முழுவதும் காணிச்சட்ட திட்டங்களுக்கு விரோதமாகவும் ஜனநாயக அடிப்படை உரிமைச் சட்டதிட்டங்களுக்கு மாறாகவும் மக்களின் காணிகளை பட்டவர்த்தனமாக பகற்கொள்ளை போல் அபகரித்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியது அந்தக் காணி உரித்துள்ளவர்களுக்கும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும் உரித்தான பொறுப்பும், கடப்பாடுமாகும். அந்த உரிமையில் உளவுத்துறையினர் தலையிடுவது என்ன நியாயம்? இதற்குக் கட்டளையிட்டது யார்? இச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இத்தகைய செயலைக் கண்டித்து நாம் நாடாளுமன்றத்தில் குரலெழுப்புவோம். சர்வதேச நாடாளுமன்றத் தலைமைக் கூட்டமைப்பிடமும் முறையிடவுள்ளோம். சர்வதேச மனித உரிமைப் பேரவைக்கும் அறிவிக்கவுள்ளோம் என்றுள்ளது.
« PREV
NEXT »

No comments