Latest News

May 10, 2013

எமது அபிவிருத்தியைக் கண்டு அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் ஆச்சரியப்படுகின்றன: அஸ்வர்
by admin - 0

முப்பது வருட கால யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் எமது நாடு கண்டுவரும் அபிவிருத்தியைக்
கண்டு அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் ஆச்சரியப்படுகின்றன என்று ஆளும்
கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். பல சிரமங்களுக்கு மத்தியில் இலங்கை - இந்திய
உறவினை மேம்படுத்துவதற்கு பாரிய பங்களிப்பினைச் செய்து தற்போது பதவிக்காலம்
நிறைவடைந்து செல்கின்ற அசோக் கே. காந்தாவின் சேவைகளுக்காக அவருக்குப்
பாராட்டுக்களையும் நன்றியினையும் இந்த சபையில் தெரிவிக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கமநல அபிவிருத்திச் சட்டத்தின் கீழான
ஒழுங்குவிதிகள், ஏற்றுமதி - இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்
மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழங்குவிதிகள் ஆகியவற்றின் மீதான விவாதத்தில்
கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அஸ்வர் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில், யுத்தத்தின் பின்னர் எமது நாடு கண்டுவரும் அபிவிருத்தி மிகவும் மேலானதாகும். வடக்குக்கான
ரயில் பாதைகள் புலிகளால் அழிக்கப்பட்டிருந்தன. ஆனால், இன்று அங்கு ரயில் பாதைகள்
அமைக்கப்படுகின்றன. புலிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் தமிழ்ச் சமூகத்தையும்
எமது சமூகத்தையும் எமது இராணுவத்தையும் அழித்தனர். ரயில் பாதைகளின் சிலிப்பர் கட்டைகளை பங்கர்கள் அமைப்பதற்குப் புலிகள் பயன்படுத்தினர்.
இவ்வாறான செயற்பாடுகளை எதிர்க்கட்சி ஒருபோதும் கண்டித்ததில்லை. எமது தொழுகை, மக்கா தொடர்பிலும் ஷரிஆ சட்டம் தொடர்பிலும் எதிர்க்கட்சியினர் தகாத
கருத்துக்களைக் கூறுகின்றனர். அல்லாஹ்வை விமர்சித்த சல்மான்
ருஷ்டி இன்று தனது நாட்டுக்குச் செல்லமுடியாத நிலையை எதிர்கொண்டுள்ளார். எனவே, மக்கா குறித்தும் ஷரிஆ குறித்தும் பேசுகின்ற எதிர்க்கட்சியினர் முஸ்லிம்களிடம்
மன்னிப்புக் கோரவேண்டும். குர்ஆன் இறைவனால் வழங்கப்பட்டது. குர்ஆனின் அடிப்படையிலேயே ஷரிஆ சட்டமும்
இருக்கின்றது. ஆடு நனைகின்றதே என்று ஓ நாய் அழுகிற கதையாக இன்று சம்பந்தன் முஸ்லிம்களுக்காக
முதலைக் கண்ணீர் வடிக்கின்றார். எனினும், முஸ்லிம்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பினையும்
ஜனாதிபதி உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
« PREV
NEXT »

No comments