Latest News

May 19, 2013

டில்லி வந்தார் சீனப்பிரதமர் லி கெகியாங்; நீர் மற்றும் எல்லை விவகாரம் குறித்து பேச்சு
by admin - 0


சீன பிரதமர், லி கெகியாங், மூன்று நாள் பயணமாக, இன்று மதியம், இந்தியா வந்தார். இருதரப்பு நல்லுறவு, வர்த்தகம் தொடர்பாக, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சீன பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற லி கெகியாங், தன் முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக, இன்று இந்தியா வந்தார்.

மதியம், டில்லி வந்த அவர், தனிப்பட்ட முறையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, எல்லை விவகாரம், தண்ணீர் பிரச்னை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளார். இரவில் அவருக்கு, பிரதமர், மன்மோகன் விருந்து அளிக்கிறார். அதில், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

சீனப்பிரதமர் லி கெகியாங்குடன், உயர்மட்டக்குழுவும் வந்துள்ளது. இந்த குழுவில் சீன அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். மதியம் 3 மணியளவில் டில்லி வந்த சீனப்பிரதமரை, வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமது, வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மாத்தாய் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் வரவேற்றனர்.

திங்கள் கிழமை, இருதரப்பு முக்கிய பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், தொழில் ஒத்துழைப்பு மற்றும் எல்லைப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. லி கெகியாங்கின், மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் போது, அவர் மும்பைக்கும் செல்கிறார். அங்கு பல ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திடலாம் என, கூறப்பட்டுள்ளது. இரு பிரதமர்களின் பேச்சுவார்த்தைகளின் போது, எல்லையில் அடிக்கடி நிகழும் பதற்றமான சூழல், சமீபத்தில், லடாக்கில் நடந்த அத்துமீறல் போன்ற விவகாரங்கள் குறித்தும் பேசப்படும்.

முன்னதாக இந்திய பயணம் குறித்து கருத்து தெரிவித்த சீனப்பிரதமர் லீ கெகியாங், கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் இந்தியா சென்றிருந்த போது, தாஜ்மஹால், இந்திய பல்கலைகழகங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் ஆகியவற்றை பார்வையிட்டேன். இந்திய மக்களின் அன்பான உபசரிப்பு மற்றும் சிறப்பான வரவேற்பு ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தது. சீனப்பிரதமராக நான் முதல் முறையாக இந்தியா செல்ல உள்ளேன். உலகில் மிகவும் மக்கள் நெருக்கமுள்ள நாடாக இருப்பதாலும், நமது நெருங்கிய நட்பு நாடு என்ற காரணத்தினாலும், இந்திய பயணத்தை நான் தேர்ந்தெடுத்தேன் என கூறினார்.

சீனப்பிரதமரின் வருகை மிகவும் சிறந்ததாக கருதுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சையத் அக்பரூதீன் கூறுகையில், உயர்மட்டத்திலான பரிமாற்றங்கம் மற்றும் ஒப்பந்தங்கள், இருநாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும் அமையும், இரு நாடுகளுக்கு இடையே உள்ள கவலையை ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளும்படி அமையும் என கூறினார்.
« PREV
NEXT »

No comments