Latest News

May 08, 2013

பயங்கரவாதச் சட்டம் நீக்கப்படவே மாட்டாது; நாடாளுமன்றத்தில் பிரதமர் திட்டவட்டம்
by admin - 0

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது கடினம். அரசியல் நோக்கர்களுக்காகவோ, அரசியல் கட்சிகள், நபர்களைக் குறிவைத்தோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை அரசு ஒருபோதும் பயன்படுத்த வில்லை''
பிரதமர் டி.எம். ஜயரட்ண நேற்று நாடாளுமன்றில் இவ்வாறு அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் பிரதமர் இவ்வாறு கூறினார். "அஸாத் சாலி கைதுசெய்யப்பட்டதைப் பயன்படுத்தி சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர். இதனையிட்டு நான் கவலையடைகின்றேன். எதிர்க் கட்சித் தலை வரும் அரசியல் நோக்கத்துக்காகத் தான் இதுகுறித்துப் பேசுகிறார் என நான் நினைக்கின்றேன்'' என்றார் பிரதமர். தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் அஸாத் சாலி பல்வேறு சந்தர்ப்பங்களில் இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இலத்திரனியல், அச்சு ஊடகங்களினூடாக கருத்துகளை வெளியிட்டுவந்தார் எனவும் அவர் கூறினார். "தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், இனங்களுக்கிடையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் சமாதானத்துக்கு அச்சுறுத்தலாகவும் இளைஞர்களைத் தூண்டும் வகையிலும் செயற்படும் நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பாகும். இது விடயத்தில் தராதரம் பார்க்காது நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். பிரிட்டனில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டது போல் இங்கு செய்யமுடியாது. பிரிட்டனுக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான பிரச்சினை தீர்ந்துவிட்டது. ஆனால், எமது நாட்டில் பயங்கரவாதம் ஒடுக்கப்பட்ட போதும் பயங்கரவாதத்தின் நிழல்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இன்னமும் தொடர்கின்றன'' என்று பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்யுமாறு விடுக்கப்படும் கோரிக்கையை நிறைவேற்றுவது கடினமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments