Latest News

May 06, 2013

காந்தரூபன், செஞ்சோலை இல்லத்தின் காணிகள் சிறிலங்கா படையினரால் சுவீகரிப்பு
by admin - 0

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காந்தரூபன் அறிவுச்சோலை மற்றும் செஞ்சோலை போன்ற அறப்பணி நிலையங்கள் அமைந்திருந்த நிலம் சிறிலங்கா படையினரால் சுவீகரிக்கப்படவுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில், மலையாளபுரம் என்ற இடத்திலுள்ள மூன்றரை ஏக்கர் காணியே படையினருக்காக சுவீகரிக்கப்படவுள்ளது. தங்களுக்கான இராணுவ வைத்தியசாலை அமைப்பதற்கே இந்த நிலத்தை தாங்கள் சுவீகரிக்கவுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். இதற்கான அறிவித்தல் குறித்த காணியில் ஒட்டப்பட்டுள்ளது.

இந்தக் காணிக்கு உரிமை கோருபவர்கள் எவரும் இனம்காணப்படாத காரணத்தாலேயே தாங்கள் இந்தக் காணியைச் சுவீகரிக்கவுள்ளதாகவும் படையினரின் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தக் காணியின் வடக்கு எல்லை பாரதிபுரத்திலிருந்து கிளிநொச்சி செல்லும் பாதையென்றும் கிழக்கு எல்லை பாரதிபுரம் வித்தியாலயமென்றும் தெற்கு எல்லை பாரதிபுரத்திலிருந்து கிளிநொச்சி செல்லும் பாதையென்றும் மேற்கு எல்லை தமிழீழ விடுதலைப் புலிகளின் பாவனை முகாம் என்றும் படையினரின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா படையினரால் இந்தக் காணியைச் சுவீகரிக்கப்படவுள்ளமைக்கு அந்தப் பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்தக் காணியில் கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காந்தரூபன் அறிவுச்சோலை, பெண் பிள்ளைகளுக்கான செஞ்சோலை ஆகிய இல்லங்கள் இயங்கியதாக இங்குள்ள 67 வயதான கந்தசாமி என்ற முதியவர் ஒருவர் தெரிவித்தார். இந்த இல்லங்களில் தாய். தந்தையர் அற்ற அநாதைப் பிள்ளைகள் வளர்க்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

காந்தரூபன் என்பவர் ஒரு கடற்கரும்புலி. இவர் சிறிய வயதிலேயே தாய் தந்தையரை இழந்து அநாதையாக வாழ்ந்தவர். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து தமிழீழ தேசியத் தலைவரால் அன்பாக வளர்க்கப்பட்டவர் என்று குறித்த காந்தரூபன் அறிவுச்சோலையின் வரலாற்றையும் அந்தக் கந்தசாமி என்ற முதியவர் சங்கதி24லுடன் பகிர்ந்துகொண்டார்.

காந்தரூபன் ஒருநாள் தலைவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, “அண்ணை, நான் அநாதையாக வளர்ந்த மாதிரி தமிழீழத்தில் இருக்கிற தாய், தந்தையற்ற பிள்ளைகள் அநாதைகளாக வளரக்கூடாது. இந்தப் பிள்ளைகளை ஒரு இல்லத்தில வைச்சுப் பராமரிக்க வேணும்” என்று கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் காந்தரூபன் தனது இலக்குக்காக காத்திருந்து ஒருநாள் சிறிலங்கா கடற்படையின் டோறா படகொன்றைத் தகர்த்தழித்தார். இவருடன் கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகிய கடற்கரும்புலிகளும் வீரகாவியமானதாக அந்த தாத்தா பழைய வரலாறுகளை மீட்டுக்கூறினார்.

காந்தரூபனின் வீரமரணத்தின் பின்னர் தமிழீழ தேசியத் தலைவர் காந்தரூபனின் கனவை நனவாக்க எண்ணியதன் விளைவாகவே காந்தரூபன் அறிவுச்சோலை உருவாக்கப்பட்டது. இந்தச் சோலையில் தாய், தந்தையர் அற்ற நூற்றுக்கணக்கான சிறார்கள் வைத்துப் பராமரிக்கப்பட்டதாகவும் தமிழீழ தேசியத் தலைவர் அந்த இல்லத்திற்கு அடிக்கடி வந்து சிறார்களுக்கு மகிழ்வூட்டுவார் என்றும் அந்த முதியவர் தெரிவித்தார். இந்த இல்லத்தில் வளர்ந்து உயர்கல்வி கற்ற பல பிள்ளைகள் பின்னர் தமிழீழ மருத்துவப் பிரிவின் வைத்தியர்களாகவும் தமிழீழ சட்டத்தரணிகளாகவும் துறைசார் வல்லுநர்களாகவும் உருவாகி தமிழ் மக்களுக்கு சேவையாற்றியதாகவும் அவர் கூறினார்.

இந்த இல்லம் அமைந்திருந்த இடம்தான் இன்று சிறிலங்கா படையினரின் வைத்தியசாலை அமைப்பதற்கு என்று சுவீகரிக்கப்படவுள்ளது. இதற்கு இப்பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள போதிலும் இடத்தை அபகரிப்பதென்று படையினர் உறுதியாக நிற்பதாகவும் எதிர்;ப்பவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் இதனால் தாங்கள் எதுவும் செய்ய முடியாமலுள்ளதாகவும் அந்த முதியவரும் மக்களும் மேலும் தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments