மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக்கோரி, விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை போலீசார் கைது செய்தனர். அவருடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்பட 500-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கடந்த மாதம் 30-ந்தேதி கோர்ட்டு உத்தரவுப்படி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் மீது மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க இளைஞர் பெருவிழாவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பேசியதாக 2 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். இதற்கிடையே கடந்த 2004-ம் ஆண்டு மதுரையில் ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்டதாக டாக்டர் ராமதாஸ் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
அந்த வழக்கில் அவருக்கு பிடிவாரண்டு வழங்கப்பட்டு, திருச்சி சிறையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக கூடங்குளத்தில் நடந்த போராட்டத்தில் டாக்டர் ராமதாஸ் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது ஏற்கனவே போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கிலும் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
அதேபோல் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மீது விழுப்புரம் ஆர்ப்பாட்ட வழக்கு, மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க இளைஞர்பெருவிழாவில் 2 வழக்கு, கடலூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஒரு வழக்கினை பதிவு செய்து இருந்தனர். இந்தநிலையில் டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.
இதையடுத்து டாக்டர் ராமதாஸ் நேற்று இரவே சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியாக ஜாமீன் வழங்கப்பட்டதற்கான உத்தரவு நேற்று இரவு 9 மணிக்கு மேல்தான் திருச்சி சிறைக்கு வந்து சேர்ந்தது. இதனால் டாக்டர் ராமதாஸ் இன்று காலை விடுதலையாவார் என்று சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை டாக்டர் ராமதாசை ஜாமீனில் விடுதலை செய்வதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு காலை 9.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியும் விடுதலை ஆனார். இதற்கிடையே ஜாமீனில் விடுதலையான டாக்டர் ராமதாசை வரவேற்க சிறை வாசலில் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமான கார்களில் வந்து குவிந்திருந்தனர்.
அவர்கள் ராமதாசை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர். திருச்சி சிறை வாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராமதாசுடன் கைதான பா.ம.க. நிர்வாகிகள் 214 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. மேலும் ஜாமீன் வழங்கப்பட்ட அனைவரும் ராமநாதபுரம் டவுண் போலீசில் தினமும் காலை நேரில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இதற்கான ஜாமீன் உத்தரவு விழுப்புரம் கோர்ட்டில் இருந்து திருச்சி சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பா.ம.க.வினர் 214 பேர் நேற்று விடுதலையானார்கள்.
No comments
Post a Comment