சமாதான மோகம்
மேலெழுந்திருந்த 2003 ம்
ஆண்டு. நீதியானதும்
நிலையனதுமான சகவாழ்வில் விருப்பம் கொண்டோரும், ஈழத் தமிழர்களின்
சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்
என குரல் கொடுத்த சிங்கள – தமிழ்... ..கலைஞர்களும் இணைந்து, 'சிங்கள – தமிழ்
கலைக் கூடல்' என்னும் தலைப்பில் 2003
ஒக்டோபர் 29-30ம் திகதிகளில்
சந்திப்பொன்றை சிறீலங்காவின் தலைநகர்
கொழும்பில் நடாத்தினார்கள். நிகழ்வின்
பிரதான ஏற்பாட்டாளர்ளாக சிங்கள முற்போக்காளர்கள் விளங்கினார்கள். நிகழ்வு சுமூகமாகவும் தமிழ் சிங்கள
உறவுகளிடையே நல்லிணக்கத்துக்காக
நம்பிக்கைதுளிர் விடுமாற் போல்
நகர்ந்து கொண்டிருந்தது. சிங்களத்தில்
பாண்டித்தியம் பெற்றவரும், தமிழ்
உணர்வாளர்களின் மரியாதைக்குரியவருமான பேராசிரியர் சுச்சரித்த கம்லத் அவர்கள்
உரையாற்ற தயாராக,
ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்வை குழப்ப
உள்ளே நுழைந்த பௌத்த பேரினவாத
மதகுரு ஒருவரின் தகவலிற்கு ஏற்ப நுழைந்த
சிங்கள வன்முறைக் கும்பலொன்று, மண்டபத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல்
நடாத்தத் தொடங்கியது. உடனடியாகவே தற்காப்பு தாக்குதலில்
இறங்கிய முற்போக்கு சிங்கள நண்பர்கள்,
தமிழர்களை பாதுகாப்பதற்காக ரத்தம்
சிந்தினார்கள். காடைக்கும்பலை பின்வாங்கச்
செய்தபடி, நிகழ்வில் பங்குபற்ற வந்திருந்த
தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர் சிங்கள
நண்பர்கள். இறுதி தமிழன் அந்த
இடத்தை விட்டு பாதுகாப்பாக
அப்புறப்படுத்தும் வரை, சுமார் 70 வயதான
பேராசியர் சுச்சரித்த கம்லத்
அங்கே நின்று தமிழர்களை பாதுகாப்பதற்கான பங்களிப்பை திறம்பட வழங்கினார். அத்தகைய ஒரு அற்புத மனிதன்; கடந்த மார்ச்
30ம்
திகதி இம்மண்ணை விட்டு பிரிந்துவிட்டார்.
ஆயினும் மானுடத்தை நேசிப்போரின்
இதயங்களில் அவர் ஆழமாக வேரூன்றியுள்ளார். பேராசியர் சுச்சரித்த கம்லத் யாழ்
பல்கலைக்கழகத்திற்கு நியமிக்கப்பட்ட
முதலாது தமிழ் பேராசிரியர் ஆவர். ஆங்கில -
சிங்கள அகராதி உருவாக்கத்திற்கு அளப்பரிய
பங்களிப்பை நல்கிய பேராசியர் சுச்சரித்த
கம்லத், பின்னர் தனது நண்பர் பேராசிரியர் க.சிவத்தம்பியுடன் இணைந்து சிங்கள – தமிழ்
- ஆங்கில அகராதியை உருவாக்கும் பணியில்
தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பேராசிரியர்
சிவத்தம்பி அவர்கள் 2011 யூன் மாதம்
எம்மை விட்டு பிரிந்த பிற்பாடும், குறித்த
அகாராதியின் வெளியீட்டுக்காக கடுமையாக உழைத்தவர் பேராசியர் சுச்சரித்த கம்லத்.
இறுதியில் அந்த
பணியை செவ்வனே நிறைவு செய்த போதும்,
அகராதி வெளியாகுமுன்னரே அந்த
மானுடநேயன் இந்த
அகிலத்தை விட்டு அகன்றுவிட்டார். தனது மாணவர்
பருவத்திலிருந்தே ஒரு மாக்சிஸ்ட் ஆக
விளங்கிய பேராசியர் சுச்சரித்த கம்லத் அவர்கள்,
1970களில் ட்றொஸ்கி குழுவினதும்,
தோழர் கீர்த்தி பாலசூரியாவினால்
தலைமை தாங்கப்பட்ட புரட்சிகர கொம்முனிஸ்ட் லீக்கினதும்
அனுதாபியாகவும் திகழ்ந்தார். அதேவேளை,
அவரின் திறமையையும் புலமையையும்
உணர்ந்து, உலகின்
பல்வேறு முன்னணி பல்கலைக் கழகங்களும்
அவருக்கு மரியாதையையும் பட்டங்களையும் வழங்கி கௌரவித்தன. மனித உரிமைக்கும் நீதிக்குமான
அவரது போராட்டத்தை அடக்கும் முகமாக
ஜெ.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தால், 1980ம்
ஆண்டு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் அவர் 15 வருடங்கள்
வேலைவாய்ப்பற்றிருந்தார். ஆயினும் அவரது போராட்ட குணத்தை அடக்க
முடியவில்லை. ஆட்சிகளும் கட்சிகளும் மாறிய போதும்,
தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்த
அடக்குமுறைக்கு எதிராக
நீட்சி பெற்றது பேராசியர் சுச்சரித்த கம்லத்தின்
போராட்டம். தற்போது ஆட்சியுலுள்ள
அரசாங்கம் தொடங்கிய போர், தமிழர்களை பட்டினி சாவு நிலைக்கு இழுத்து
போது, அந்த போரை நிறுத்தக்
வேண்டுகோள் விடுத்து,
முன்னின்று செயற்பட்டார். அத்துடன்,
தமிழ்மக்களுக்கு எதிரான போரை ஒரு இன
அழிப்பு போர் என வெளிப்படையாக சிங்களத்தில் பேசியும் எழுதியும் வந்தார்.
அதேவேளை, சுயநிர்ணய
உரிமை அடிப்படையில்
தமிழர்களுக்கு தனிநாடு அமைப்பதற்கான
உரிமை உண்டு என உறுதிபடத்
தெரிவித்து வந்ததோடு, சிங்கள மக்கள் மகாவம்ச மனோபாவத்திலிருந்து வெளிவர
வேண்டும் எனவும் கூறினார். தான் வரிந்து கொண்ட
கொள்கைக்காகவே தன்
இறுதி மூச்சுவரை வாழ்ந்த பேராசியர்
சுச்சரித்த கம்லத் அவர்கள்,
அடக்குமுறைக்கு எதிரான
போராட்டத்தினதும், சிங்கள தமிழ் மக்களுக்கு இடையேயான மீள்
நல்லிணக்கத்திற்குமான அடையாளமாகவும்
திகழ்ந்தார். தமிழ்மக்களுக்கும் சிங்கள
மக்களுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வும்
மீள்நல்லிணக்கமும் எற்பாடுமாயின், அந்த
அத்தியாயத்தின் கதாநாயகர்களில் ஒருவராக பேராசியர் சுச்சரித்த கம்லத் அவர்களின் பெயர்
பதியப்படும். - ச.பா.நிர்மானுசன்
No comments
Post a Comment