Latest News

April 20, 2013

மஹிந்த குடும்ப ஆட்சியில் இலங்கை நிலவரம் மோசம்' - அமெரிக்கா
by admin - 0

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் உள்ள அரசாங்கத்தால் ஆட்சி செய்யப்படும் இலங்கையில் பலவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறுவதாக அமெரிக்கா தனது நாடுகளுக்கான 2012 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் கூறியுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் இலங்கை அரசாங்கம் இருப்பதாக தனது முக்கிய அம்சங்களின் தொகுப்பின் ஆரம்பத்திலேயே கூறியுள்ள அந்த அறிக்கை, ஜனாதிபதி, நாடாளுமன்றம் மற்றும் உள்ளூர் தேர்தல்கள் அங்கு பிரச்சினைகள் நிறைந்தவையாக இருந்ததாக சுயாதீன பார்வையாளர்கள் குறிப்பிடுவதாகக் கூறியுள்ளது.
தேர்தலிகளில் முக்கிய கட்சிகள் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதாகவும், ஆளும்கட்சி அரச நிறுவனங்களையும், ஏனைய வளங்களையும் அதற்கு பயன்படுத்துவதாகவும் அது கூறியுள்ளது.பொதுமக்கள் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாகப் பார்க்கப்படுபவர்கள் மற்றும் செய்தியாளர்கள் தாக்குதலுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாவதாகவும் அது கூறுகின்றது.
இதனால், செய்தியாளர்கள் சுயதணிக்கை செய்துகொள்வதாகவும், பலர் பலவந்தமாக காணாமல் போகும் நிலைக்கு உள்ளாவதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
அரச படைகள் சித்ரவதைகள் போன்றவற்றில் ஈடுபடுவதாகவும், குறிப்பாக தமிழ் பகுதிகளில் பல துணைப்படைகள் மனித உரிமை மீறல்கல்களில் ஈடுபடுபவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டத்துக்கு விரோதமான கைதுகளும், தடுத்து வைப்புக்களும், அளவுக்கு அதிகமான நீண்ட கால விசாரணைக்கு முன்பான தடுத்து வைப்புக்களும் பெரும் பிரச்சினையாக அங்கு இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு நியாயமான விசாரணைகள் மறுக்கப்படுவது இன்னமும் ஒரு பிரச்சினையாக இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. அத்துடன் நீதித்துறையின் சுதந்திரமும் அங்கு கேள்விக்குள்ளாகி இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் குடிமக்களின் அந்தரங்க உரிமைகளை மீறுவதாகவும், பேச்சு, ஊடகம், பொது இடங்களில் கூடுதல் மற்றும் நடமாட்டம் ஆகியவற்றில் கட்டுப்பாடு காணப்படுவதாகவும் அந்த அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.
பொதுமக்கள் பொதுவாக எங்கும் சென்றுவரக்கூடிய நிலைமை இருந்தாலும், வடக்கு பகுதியில் சில இரானுவ சோதனைச் சாவடிகள் இன்னமும் தொடர்வதாகவும், உயர்பாதுகாப்பு வலயங்கள் பொதுமக்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

18 வது திருத்தச் சட்டத்தின் மூலம் முன்னர் சுயாதீனமான பொது நிறுவனங்களாக திகழ்ந்தவற்றின் நியமன அதிகாரம் ஜனாதிபதியின் கைகளுக்குள் வந்திருக்கிறது.இவற்றில் பொலிஸ், நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் அடங்குகின்றன. பெண்களுக்கு எதிரான வன்செயல்களும், பாரபட்சமும் பிரச்சினையாக இருக்கின்றன.
சிறார் துஷ்பிரயோகம், ஆட்களை கடத்துவது ஆகியனவும் தொடர்கின்றன.வலது குறைந்தவர்கள் மற்றும் சிறுபான்மை தமிழர்களுக்கு எதிரான பாரபட்சமும் தொடர்கிறது.
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படும் தமிழர்களின் எண்ணிக்கை அவர்களது மொத்த சனத்தொகைக்கு பொருத்தமற்றதாக மிக அதிகமாக காணப்படுகிறது.
ஒருவரது பாலியல் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் மீது பாரபட்சம் காட்டப்படுவதும், எச் ஐ வி தொற்று ஏற்பட்டவர்களுக்கு எதிரான பாரபட்சமும் காணப்படுகிறது.
தொழிலாளர் மற்றும் சிறார் தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்படுவதும் பிரச்சினையாக தொடர்கிறது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மிகச் சிலர் மீதே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஆனால், 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த போரில் இடம்பெற்ற சர்வதேச மனித நேயச் சட்டங்களின் மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் மீறல்கள் தொடர்பில் எவரையும் பொறுப்புக் கூறுச் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
« PREV
NEXT »

No comments