'ஸ்காபுறோ கொன்வென்சன் சென்ரில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில், கனேடிய அரசியல் - சமூகப் பிரதிநிதிகள், கனேடிய தமிழ்சமூகத்தின் இன உணர்வாளர்கள், கல்விமான்கள், வர்த்தகர்கள், ஊடகர்கள் சமூக அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரையும் உள்ளிடக்கியதாக 750க்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்த மண்டபம் நிறைந்த பெருநிகழ்வாக இது அமைந்திருந்தது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது உரை காணொளிவழியே திரையிடப்பட்டிருந்தது.
தமிழீழ சுதந்திர சாசனத்தை பற்றிய விளக்கமும், அதற்குரிய கேள்விகொத்தும் வருகை தந்தோருக்கு வழங்கப்பட்டிருந்ததோடு கேள்விக் கொத்திற்கான பதில்களை உடனடியாகவே தரவேற்றம் செய்யும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
சர்வதேச மன்னிப்புச் சபை கனேடிய பொறுப்பதிகாரியும், மனித உரிமைவாதியுமான கலாநிதி தியடோர் ஒர்லின் மற்றும் கனேடிய அரசியல் பிரமுகர்களான நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன், மார்க்கம் மாநகர சபையின் மேயர் பிராங் ஸ்காபிற்றி, மாநகர பை உறுப்பினர் லோகன் கணபதி, ஸ்காபுறோ ஏஜின்கோட் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் காரியியானிஸ், ரொறன்டோ மாநகர சபை உறுப்பினர் றேமன் சௌ பங்கெடுத்து கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.
பிரான்சில் இருந்து சென்று தற்போது கனேடிய மண்ணில் பல கலைஆற்றுகைகளை நிகழ்த்தி வரும் பிரபல நடனக்கலைஞர் பிரேம கோபால் அவர்களது சிறப்பு நடனத்துடன் பிரபல நடனஆசரியர்கள் யாளினி ராஜகுலசிங்கம், திருமதி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களின் மாணவிகளின் நடன நிகழ்ச்சிளுடன் பல கலைஞநிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
கருத்துரைகளின் பிழிவு:
பிரதமர் வி.உருத்திரகுமாரன்:
தமிழீழத்தில் பூரண சுதந்திரத்தை ஏற்படுத்தும் வகையில் நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடாக விடுதலை சாசனத்தை முரசறைவிக்க உள்ளோம். தமிழீழ விடுதலை சாசனம் 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை மகாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை முரசறைவதன் மூலம் நாம் எமது போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லலாம். அதன் மூலம் எமது தேவையினை அகைத்துலகிற்கு எடுத்துக்காட்ட முடியும்.
சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதி கலாநிதி தியடோர் ஒர்லின்:
இலங்கையில் உள்ள சகல மக்களினதும் உரிமைகளும், கௌரவமும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பிரதேசமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அங்கு வாழும் தமிழ் மக்களின் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதிகளிலுள்ள இராணுவத்தினர் உடனடியாக அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
நா.தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர் உஷா சிறீஸ்கந்தராசா:
இலங்கைத்தீவில் வாழும்தமிழ் மக்களின் அரசியல் குறிக்கோளை வென்றெடுப்பதற்கும், தமிழ் மக்களின் உடமைகளைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. சிங்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கையினால் நாம் எமது உடன் பிறப்புக்களையும், நிலங்களையும், அடிப்படை உரிமைகளையும் இழந்து விட்டோம். ஐக்கிய நாடுகள் சபை கூட எமது மக்களை பாதுகாக்கத் தவறி விட்டதை ஒப்புக் கொண்டுள்ளது. தமிழீழ மக்களின் சுதந்திரத்தினைப் பேணும் வகையில் தமிழீழ சுதந்திர சாசனம் அமையவிருக்கின்றது.
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன்:
இலங்கையில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி தமிழ் ஊடகவியலாளர்களும் துன்புறுத்தப்பட்டும், கொலை செய்யப்பட்டும் வருகின்றனர். அதனால் அங்கு நடைபெறவிருக்கும் பொதுநல அமைப்பு நாடுகளின் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என கனேடிய பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பர் அறிவித்துள்ளார். அந்நிகழ்வில் அவர் கலந்து கொள்ளக் கூடாது என்பதனை இங்கு வாழும் தமிழ் மக்கள் அனைவரும் அவருக்கு வலியுறுத்த வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் வென்றெடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு நாம் பூரண ஒத்துழைப்பினை நல்க வேண்டும்.
No comments
Post a Comment