இரத்தினபுரி ஹேயஸ் தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை தமிழ் இளைஞர் ஒருவரை சிங்கள இளைஞர்கள் கடுமையாகத் தாக்கிய சம்பவத்திற்கு பின்பு கொலன்ன ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் தோட்ட அதிகாரியின் அச்சுறுத்தல் காரணமாக தற்போது காவத்தை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இ.தொகா உறுப்பினர் ரூபன் பெருமாள் அவர்கள் தெரிவித்தார்.
அதேவேளை, இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமையன்று தெனியாயவிலிருந்து இரத்தினபுரி நோக்கி பிரயாணம் செய்த தனியார் பேரூந்தினை வழி மறித்து தங்கவேல் பத்மதாதன் (வயது 26) என்ற குறித்த தோட்ட இளைஞனை கடுமையாக தாக்கியது மட்டுமல்லாது அவரின் தேசிய அடையாள அட்டை, பணம் போன்ற அவரது உடைமைகளையும் பறித்துச் சென்றுள்ளனர்.
அன்றைய தினமே, ஹேயஸ் தோட்ட சந்திக்குச் சென்றிருந்த வேம்படி சிவரட்ணம் (வயது 22) எனும் தோட்ட இளைஞனையும் பெரும்பான்மை இனக்குழுவினர் வியாபார ஸ்தலமொன்றினுள் இழுத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இவ்வாறான தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து அத்தோட்ட மக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாக அறிந்து அவர்களை நேரில் சந்திக்கச் சென்ற இ.தொ.கா உறுப்பினர் ரூபன் பெருமாள் அவர்கள் இவ்வாறான இன வெறித்தாக்குதல்கள் கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தாம் கடந்த திங்கட்கிழமையன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தோட்ட மக்களை சந்தித்த வேளையில் இவ்வாறான பிரச்சினைகள் தமக்கு தொடர்ச்சியாக நேர்வதாகவும் அதற்கான நிரந்தர தீர்வொன்றை தமக்கு பெற்றுத்தரும் படி கௌரவ அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் நேரடிக் கவனத்தினை செலுத்துமாறும் கோறி மகஐர் ஒன்றை தமக்கு கையளித்துள்ளதாக தெரிவித்த ரூபன் பெருமாள் அவர்கள் அதனை தொலைநகல் மூலமாக கௌரவ அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments
Post a Comment