
இலங்கையில் மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டம் நடத்த முற்பட்ட 16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் மீது சிலர் நடத்திய தாக்குதலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.
கொட்டகலை நகரில் இன்று முற்பகல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான அண்மைய சம்பள ஒப்பந்தத்தை எதிர்த்து, 16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக் கிழமை போராட்டம் நடத்த நடவடிக்கை எடுத்திருந்தது.
ஆனால் இந்தக் கூட்டமைப்புக்கு எதிராக இன்னொரு குழுவொன்று கொட்டகலை நகரில் போராட்டம் நடத்த முனைந்ததாகவும், அந்தக் குழுவினர் தம்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதலில் காயமடைந்த தான் உள்ளிட்ட மூன்று பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் மனோ கணேசன் கூறினார்.
இதேவேளை, கொட்டகலையில் நடந்த தாக்குதல் காரணமாக தமது போராட்டம் இறுதியில் பத்தனை நகரில் நடத்தப்பட்டதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment