தீர்மானத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக
திருத்தங்களை செய்யவேண்டும்
என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தீவிர
போராட்டங்கள் நடைபெற்று வந்தன. ஈழத் தமிழர்களுக்காக தமிழநாடு முழுவதும்
கல்லூரி மாணவர்கள் சாலை மறியல், உண்ணாவிரதம்,
முற்றுகை, கொடும்பாவி எரிப்பு என பல
வகைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த
போராட்டம் மிகவும் தீவிரமாகி பொதுமக்களின்
ஆதரவையும் பெற்றது. அவர்களும்
ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஐ.நா.மன்றத்தில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான
தீர்மானம் வெற்றி பெற்றது. இருப்பினும் இதனால் ஈழத்தமிழர்களுக்கு குறிப்பிட்டு சொல்லும்
அளவுக்கு எந்த பயனும் ஏற்பட்டு விடப்போவதில்லை என்றும், மறைமுகமாக
இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவே தீர்மானத்தில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன
என்றும், அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதற்கிடையே கடந்த 2 நாட்களாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்ட குரல்கள்
கொஞ்சம் குறைய தொடங்கியுள்ளன. இதனால் நாளை (25-ந்தேதி) தமிழகம் முழுவதும்
கலைக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. என்ஜினீயரிங் கல்லூரிகளை திறக்கும் தேதி மட்டும் நாளை முடிவு செய்யப்பட உள்ளதாகவும்
கூறப்பட்டது. ஆனால் இதனை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ்
மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, எந்த கல்லூரிகளும் நாளை திறக்கப்படாது. இதுபற்றி பின்னர் பேசி முடிவு செய்யப்படும்
என்றார். மாணவர்கள் இதுநாள் வரை நடத்திய போராட்டங்களின் போது மத்திய- மாநில
அரசுகளின் பிரதிநிதிகள் தங்களை சந்தித்து பேசவேண்டும் என்றும், அப்போது ஈழத்
தமிழர்களின் நலனுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக
உறுதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுதொடர்பாக யாரும் மாணவர்களுடன் எந்தவிதமான பேச்சு வார்த்தையும்
நடத்தவில்லை. எனவே கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை தொடர
முடிவு செய்துள்ளனர். இதனால் கல்லூரிகளை உடனடியாக திறப்பதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ்
கூறும்போது, அடுத்தக் கட்டமாக மாணவர்களை திரட்டி எந்த மாதிரியான
போராட்டங்களை நடத்துவது என்பது பற்றி அறிவிப்போம். மற்ற மாவட்டங்களிலும்
மாணவர்களை தொடர்பு கொண்டு போராட்டம்
நடத்துவது பற்றி ஆலோசித்து வருகிறோம் என்றார். இதேபோல போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் திவ்யா கூறுகையில், மாணவர்களின் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. வருகிற 27-ந்
தேதி அன்று தமிழகம் முழுவதும் மத்திய
அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். இதுபோன்ற காரணங்களால் கலைக்கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங்
கல்லூரிகளை உடனடியாக திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கல்வி துறை உயர்
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment