வனயுத்தம் படத்துக்குப் பிறகு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கதையை படமாக்கத் திட்டமிட்டுள்ளேன் என்று இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
குப்பி படத்தின் மூலம் பரபரப்பாக அறிமுகமானவர் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ். அதன் பிறகு இப்போது வனயுத்தம் என்ற பெயரில் சந்தனக் காட்டு வீரப்பனின் கதையை எடுத்துள்ளார். இதே படம் கன்னடத்தில் அட்டஹாஸா என்ற தலைப்பில் வெளியிடுகின்றனர்.
இந்த நிலையில் வனயுத்தம் படத்துக்கு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில காட்சிகளை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர். அந்தக் காட்சிகளை நீக்க ரமேஷ் ஒப்புக் கொண்டதால், இப்போது படம் எந்த சிக்கலுமின்றி வெளியாகிறது.
இதுகுறித்து இயக்குநர் ஏஎம்ஏர் ரமேஷ் கூறுகையில், “இந்தப் படத்தில் முத்துலட்சுமி ஆட்சேபித்த காட்சிகளை நீக்கிவிட்டோம். யார் மனதையும் புண்படுத்த இந்தப் படத்தை எடுக்கவில்லை. உண்மைகளை வெளியில் சொல்லவே எடுத்தேன். இதற்காக நான் எடுத்துக் கொண்ட காலம் கொஞ்சமல்ல.. 7 ஆண்டுகள்.
இந்தப் படத்துக்குப் பிறகு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவிருக்கிறேன். பிரபாகரன் வாழ்க்கை குறித்த பல விவரங்களை என்னிடம் விடுதலைப் புலிகளே கொடுத்துள்ளனர். அதனால் அந்தப் படத்துக்கு எதிர்ப்பு வராது என நம்புகிறேன்.
இங்கே தமிழகத்தில் ஏதாவது பிரச்சினை வந்தாலும் சமாளிப்பேன்,” என்றார்.
No comments
Post a Comment