Latest News

February 12, 2013

மூன்றாவது முறையாக வட கொரியா அணுவெடிச் சோதனை நடத்தியது
by admin - 0


வட கொரியா, ஐநா மன்றத்தின் எச்சரிக்கைகளையும் மீறி, மூன்றாவது முறையாக அணுகுண்டுச் சோதனை செய்துள்ளது.
இந்த அணு ஆயுதச் சோதனையை, அதன் ஒரே ஒரு பெரிய கூட்டாளி நாடான, சீனாவும் கண்டித்துள்ளது. உலகெங்கிலிருந்தும் அதற்கும் கண்டனங்கள் வந்துள்ளன.
புதிய தலைவராக கிம் ஜோங் அன் பதவியேற்றதிலிருந்து வரும் முதல் சோதனையான இந்த அணு வெடிச்சோதனையில், சிறிய , சற்று கனம் குறைவான அணுக் கருவி ஒன்று பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அது முன்பு நடந்த சோதனைகளைப் போலன்றி, கூடுதல் வெடிதிறனுடன் இருந்ததாகவும், வட கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்த சோதனை பாதுகாப்பான முறையில் நடத்தப்பட்டதாக அது கூறியது.
அமெரிக்கா கண்டனம்
இந்த சோதனை ஒரு சிக்கலைத் தூண்டக்கூடிய நடவடிக்கை என்றும், ஐநா மன்றத்துக்கு வடகொரியா அளித்த உறுதிமொழிகளை மீறுவதாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியிருக்கிறார்.
ஜப்பானும் வட கொரியாவிடம் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது.
தென் கொரியாவில் ஒரு அதி உயர் எச்சரிக்கை நிலை அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த செவ்வாய்க்கிழமை, பின்னதாக, ( 1400 மணி ஜிஎம்டி) ஐ.நா மன்ற பாதுகாப்பு கவுன்சில் இதைப் பற்றி விவாதிப்பதற்காகக் கூட இருக்கிறது.
கடந்த மாதம்தான் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், வட கொரியா டிசம்பரில் நீண்ட தூரம் செல்லக்கூடிய ராக்கெட் ஒன்றை பரிசோதித்ததற்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.
« PREV
NEXT »

No comments