Latest News

January 21, 2013

ஐ.நா கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது மேலும் ஒரு தீர்மானம்
by admin - 0

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 22வது கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது மேலும் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இத்தீர்மானத்தை அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து கொண்டு வருவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாரிய முன்னேற்றத்தை வெளிப்படுத்த தவறியதன் அடிப்படையிலேயே இத்தீர்மானம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என சுட்டிக்காட்டப்பட்ட சம்பவங்களில் சனல் 4 தொலைக்காட்சியின் காணொளி உள்ளிட்ட ஏழு அல்லது எட்டு சம்பவங்கள் குறித்தே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரிய வருகின்றது.

வெளிநாட்டுத் தூதுவர்களுடன் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின் போது, உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் 35 சதவீதமான பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்தார்.

அதேவேளை அரசியல் தீர்வு, வடபகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படைத்தரப்பினரின் எண்ணிக்கையைக் குறைத்தல் மற்றும் சட்டத்துக்கு புறம்பாக தமிழ் மக்களின் காணி அபகரிப்பு உள்ளிட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் கவனம் கொள்ளப்படவில்லை என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவைகளைவிட பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஷிராணி பண்டாரநாயக்க நீக்கப்பட்டமை, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமை போன்ற விவகாரங்கள் தொடர்பிலும் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் கேள்விகள் எழுப்பப்படக்கூடிய வாய்புக்கள் உள்ளதாகவும் பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார் என இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.

« PREV
NEXT »

No comments