Latest News

December 11, 2012

இந்தியாவில் 'கண்ணில்லாத' புதிய கெளுத்தி மீண் கண்டுபிடிப்பு
by admin - 0

இந்தியாவின் கண்களே இல்லாத புதிய வகை கெளுத்தி மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் உயிரியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தின் இரிஞ்சாலக்குடாப் பகுதியிலுள்ள ஒரு ஆழ் கிணற்றிலேயே கண்ணில்லாத இந்த கெளுத்தி மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுச்சூழல் மற்றும் அதன் கட்டமைப்பில், கண்களே இல்லாத கெளுத்தி மீன்களை காண்பது அரிது.
இவ்வகையான உயிரினங்கள் பெரும்பாலும் நிலத்தின் அடியில் சேறும் சகதியும் இருக்கும் பகுதியில் வசிப்பவை.
அப்துல் கலாமின் பெயர்
இந்த புதிய வகை மீனினத்துக்கு, இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பெயரை உள்ளடக்கி ஹொராக்லனிஸ் அப்துல்கலாமி என்று பெயரிடப்பட்டுள்ளது.
அறிவியல்துறைக்கு அவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவரது பெயர் இந்த மீனினத்துக்கு சூட்டப்பட்டதாக இதில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.ஆழமான கிணறுகள், ஆழ் நீர் நிலைகளில் இருக்கும் சுரங்கங்கள் போன்ற இடங்களில் வாழும், கண்கள் இல்லாத இந்த வகையான கெளுத்தி மீன்கள் குறித்த கண்டுபிடிப்பும், அது தொடர்பிலான ஆய்வுகளும் மிகவும் ஆச்சரியம் மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியவை என்று இந்த கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்த குழுவில் இருந்த கொச்சி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் கடல்சார் உயிரியல்துறையில் பேராசிரியராக இருக்கும் டாக்டர் பிஜாய் நந்தன் தெரிவித்தார்.
“மீனினம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்த விஷயங்களை மட்டும் இவ்வகையான அரிய மீன்களின் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துவதில்லை. அதற்கு அப்பாற்பட்டு, பல உயிரினங்கள் எப்படித் தோன்றின, எப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளது என்பது போன்ற நுண்ணிய விஷயங்களை அறிந்து கொள்ளவும் இவ்வகையான கண்டுபிடிப்புகள் உதவுகின்றன” என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மிகச் சிறியது
மிகவும் சிக்கலான சுற்றுச்சூழலில் வாழும், ரத்த மீன்கள் என்றழைக்கப்படும் இந்த அரிய வகை மீனினங்கள், ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் சுமார் 3.78 சென்டி மீட்டர் நீளம் உள்ளவை.
இந்தப் புதிய மீனினத்தின் புறத்தோற்றம் குறித்த அடிப்படை ஆய்வுகள் முடிந்து விட்டதாகவும், அதனுடைய மூலக் கூறுகள், அது தோன்றிய விதம் குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் டாக்டர் பிஜாய் நந்தன் கூறுகிறார்.
அந்த ஆய்வுகள் மூலம் அவை எங்கிருந்து தோன்றின, எந்த உயிரினத்திலிருந்து இவை உருப்பெற்றன, மற்ற உயிரினங்களுக்கும் இவற்றுக்குமான தொடர்புகள் போன்றவை தெரியவரக்கூடும் எனவும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.



« PREV
NEXT »

No comments