Latest News

November 30, 2012

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடாத்தவுள்ள கண்டனப் பேரணிக்கு ஆதரவினை வழங்க வேண்டியது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வரலாற்றுப் பொறுப்பு
by admin - 0


மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஸ்டித்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடந்த 27ம் திகதி மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து, மறுநாள் மாணவர்கள் அமைதி வழியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை யாழ் பல்கலைக்கழக பகுதியில் நடாத்தினார்கள்.
இதன்போது, அங்கு ஏற்கனவே தயார் நிலையில் குவிக்கப்பட்டிருந்த சிறீலங்கா இராணுவத்தினரும் பொலிசாரும் அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த மாணவர்கள் மீது மிகக் கோரமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டனர்.
இதன் விளைவாக, சுமார் 20 மாணவர்கள் காயமடைந்ததோடு, அங்கு விஜயம் செய்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சரவணபவனின் வாகன சேதமாக்கப்பட்டதுடன், அவருடன் கூடச்சென்ற உதயன் நாளிதழின் ஆசிரியர் திரு.பிறேமானந் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அறியமுடிகிறது.
குறித்த தாக்குதல் சம்பவத்தினை தொடர்ந்து திரு.சரவணபவன் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடாத்தியிருந்தார். அப்போது, குறித்த தாக்குதலுக்கு எதிராக கூட்டமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு இல்லையென்ற தொனியில் திரு.சரவணபவன் பதிலளித்திருந்தார்.
இதேவேளை, மாவீரர் நாளன்று தமது வீடுகளை விட்டு வெளியேறாதவாறு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும்  பொதுச்செயலாளர் திரு.செல்வராச கஜேந்திரன் ஆகியோரது வீடுகளின் வாசலில் அதிகமான இராணுவத்தினர் அச்சுறுத்தும் பாணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆயினும், நவம்பர் 28ம் திகதி மாணவர்கள் மீது இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு திட்டமிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசத்தின் மீது வீழ்ந்த அடியென்பதால் அதனை ஒரு கூட்டுநிகழ்வாக டிசம்பர் 3ம் திகதி நடாத்த முடிவெடுத்தது.
அதனடிப்படையில், கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் தொடர்பினை மேற்கொண்டு விடயம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த, திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் தான் நிச்சயமாக குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு தெரிவித்ததோடு, கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடயத்தை அறிவித்தார்.
விடயம் அறிந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிறீதரன் அவர்கள், தான் இரணைமடு விவகாரம் தொடர்பாக டிசம்பர் 3ம் திகதி சிறீலங்கா நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளதால், ஆர்ப்பாட்டப் பேரணியை மறுநாளான டிசம்பர் 4ம் திகதிக்கு மாற்றினால், தானும் கலந்துகொள்ள முடியும் என திரு.செ.கஜேந்திரன் அவர்களுக்கு தெரியப்படுத்தினார். அதற்கிணங்க, கண்டனப் பேரணியை டிசம்பர் 4ம் திகதி நடாத்துவதாக, நவம்பர் 28ம் திகதி மாலை சுமார் 6:30 மணியளவில் வடகிழக்கில் இடம்பெறும் போராட்டங்களில் அதிகமாக கலந்துகொள்பவர்களான ஜனநாயக மக்கள் முன்னணியில் தலைவர் திரு.மனோ கணேசன், இடதுசாரி முன்னணி மற்றும் புதிய ஜனநாயக மாக்சிஸ்ட்-லெனின் கட்சிக்கும் அறிவிக்கப்பட்டது.
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v.sampaassampanthan.jpgஇதேவேளை, ஒற்றுமை தேவையென வெளியில் கூறிக்கொள்ளும் கூட்டமைப்பிலுள்ள ஒருசிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுயஇலாப அரசியல்  கருதி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏலவே திட்டமிட்டிருந்த கண்டனப் பேரணிக்கு போட்டியாக டிசம்பர் 3ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளதாக அறிவித்தது.
மிகநெருக்கடியான காலகட்டத்தை தமிழ்த் தேசியம் எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில், தமிழர் தேசத்தின் மீது வீழ்ந்த வலிமிகுந்த தாக்குதலினை தமது அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்த முனையும் கூட்டமைப்பிலுள்ள சில உறுப்பினர்களின் செயற்பாடு தனித்து கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல. மாறாக, தமிழ்த் தேசியத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதோடு தமிழ்மக்களின் வாழ்வை மேலும் அவலத்துக்குள் தள்ளும் முயற்சியுமாகும்.
ஆகவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொள்ள திட்டமிட்டுள்ள கண்டனப் பேரணிக்கு போட்டியாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடாத்துவதை கைவிடுவதோடு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடாத்தவுள்ள கண்டனப் பேரணிக்கு ஆதரவினை வழங்க வேண்டியது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வரலாற்றுப் பொறுப்பும் தவிர்க்கமுடியாத கடமையுகும்.
அதுவே, தமிழ்த் தேசியத்துக்கும் தமிழ்மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யும் பேருதவியாகும். இல்லையேல், யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் குருதியில் குளிர்காயும் கூட்டமைப்பு என்ற வரலாற்று சாபத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளாக நேரிடும்.
இ.மார்க்கண்டேயன்
« PREV
NEXT »

No comments