புலிக்கொடி பறந்தமை தொடர்பில் எவரும் கைது செய்ய்படவில்லை புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்தும்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர்
எரிக்பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். பொலிஸ் தலைமையத்தில் இன்று வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
அதில் வல்வெட்டித்துறைப் பகுதியில் ஏற்றப்பட்ட புலிக்கொடி தொடர்பில்
யாராவது கைது செய்யப்பட்டுள்ளார்களா என்று ஊடகவியலாளர் ஒருவரால்
கேள்வி எழுப்பப்பட்டது. அதன் போதே பிரதிப் பொலிஸ் மா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தீருவில் பகுதியில் உள்ள கடந்த 21 ஆம் திகதி காலை தனியார்
தொலைத்தொடர்பு கோபுரத்தில் புலிக்கொடி கட்டப்பட்டு பறந்துகொண்டிருந்த
சம்பவம் இடம்பெற்றது. இனந்தெரியாத நபர்களினால் 20 ஆம் திகதி இரவு புலிக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.
எனினும் மறுநாள் அதிகாலை வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்
அடிப்படையில் அங்கு சென்ற இராணுவத்தினரும் பொலிஸாரும் புலிக் கொடியை அகற்றிச்
சென்றனர். எனினும் இச் சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. எனினும்
புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார். எனினும் சம்பவம் இடம்பெற்றதாக அறிந்தவுடன் அனைத்து ஊடகங்களும் இவ்வாறான சம்பவம்
இடம்பெற்றதா என வல்வெட்டித்துறைப் பொலிஸாரிடம் கேட்ட போது அவர்கள்
புலிக்கொடி பறக்கவும் இல்லை நாம் அகற்றவும் இல்லை என தெரிவித்தனர். எனினும் அன்றைய தினம் மாலை பொலிஸ் பேச்சாளர் அவ்வாறான சம்பவம்
ஒன்று நடைபெற்றதனை ஒத்துக்கொண்டார். எனினும் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்ட இடத்தில் மாவீர்கள் நினைவான
தூபி ஒன்று முன்னர் இருந்ததாகவும் அது யுத்த முடிவினை அடுத்து உடைக்கப்பட்டதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் கார்த்திகை 21 ஆம் திகதியில் இருந்து மாவீரர்
வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment