ரூ.36 கோடியில் 20 நவீன சேமிப்பு-குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சேமிப்புக் கிடங்குகள் ஒவ்வொன்றும் (2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு)
ரூ.1.20 கோடியில் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்திலுள்ள பெரும்பாலான சிறு மற்றும் குறு விவசாயிகள் பயிர்க்
கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும், பயிர்களை நீண்ட
நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்பதாலும்
அறுவடை முடிந்தவுடன் கிடைத்த விலைக்கு தங்கள்
விளை பொருட்களை விற்று விடுகின்றனர். இதன் காரணமாக, தாங்கள்
விளைவித்த பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். விலை வீழ்ச்சியின் போது பொருட்களை பாதுகாத்து, பின்னர்
விலை ஏற்றத்தின் போது விற்பனை செய்வது விவசாயிகளின் வருவாயைப்
பெருக்க உதவும். அறுவடைக் காலங்களில் உற்பத்தி அதிகரிப்பால்
விலை வீழ்ச்சியும், தேவை அதிகரிக்கும் போது உற்பத்தி இல்லாததால்
விலை ஏற்றம் ஏற்படுவது தடுக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு நவீன
முறையிலான சேமிப்புக் கிடங்குகளை கூடுதலாக உருவாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இந்த ஆண்டு 20 நவீன சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 20
குளிர்பதனக் கிடங்குகள் ரூ.30.36 கோடி செலவில் அமைக்கப்படும். சேமிப்புக் கிடங்குகள்: செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்), விருத்தாசலம்
(கடலூர்), கருமண்ட செல்லிப்பாளையம் மற்றும் வேப்பிலி (ஈரோடு),
திருப்பத்தூர், வாணியம்பாடி (வேலூர்), துவரங்குறிச்சி (திருச்சி),
பொங்கலூர், பல்லடம் மற்றும் தொண்டாமுத்தூர் (கோவை),
கள்ளக்குறிச்சி (விழுப்புரம்), செம்பனார்கோவில் (நாகப்பட்டினம்), அரூர்,
பென்னாகரம், போச்சம்பள்ளி (தருமபுரி), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கும்பகோணம் (தஞ்சாவூர்),
போடிநாயக்கனூர் (தேனி), ஆத்தூர் (சேலம்) ஆகிய 20 இடங்களில் நவீன
சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். இதேபோன்று, ஒவ்வொன்றும் 25 மெட்ரிக் டன் கொள்ளளவில் ரூ.6.36
கோடி செலவில் 20 இடங்களில் குளிர்பதனக் கிடங்குகளும் அமைக்கப்படும்.
பல்லடம், பொள்ளாச்சி, வடக்கிப்பாளையம் (கோவை), மேச்சேரி,
வாழப்பாடி (சேலம்), கிருஷ்ணகிரி, ஓசூர் (தருமபுரி), செய்யார், சேத்துபட்டு,
வந்தவாசி மற்றும் வேட்டவலம் (திருவண்ணாமலை), வெள்ளக்கோயில்,
அவல்பூந்துறை (ஈரோடு), அம்பாசமுத்திரம், புத்தூர், சாத்தான்குளம் மற்றும் கழுகுமலை (திருநெல்வேலி), கள்ளக்குறிச்சி (விழுப்புரம்), அரியலூர்
(திருச்சி), விருத்தாச்சலம் (கடலூர்) ஆகிய 20 இடங்களில் குளிர்பதனக்
கிடங்குகள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
No comments
Post a Comment