Latest News

October 08, 2012

என்ன ஆயுதம் தூக்க போகிறோம் நீங்களே தீர்மானியுங்கள்
by admin - 0

தமிழர்கள் எதிர்காலத்தில் எந்த ஆயுதத்தைத் தூக்க வேண்டும் என்பதைச் சர்வதேசம் தான் தீர்மானிக்கப் போகின்றது. இலங்கை அரசை நம்புவதற்கு தமிழர்கள் இனியும் தயாராக இல்லை. இவ்வாறு நேற்று யாழ். வந்த ஐ.நா.துணைச் செயலாளர் அஜய் சிப்பரிடம் யாழ்.பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஐ.நா. குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அபிவிருத்தியூடாக நிரந்தரத் தீர்வை அடைய முடியாது. நிரந்தர தீர்வின் மூலமே அபிவிருத்தியை அடைய முடியும். வீதிகள் திருத்தப்படுகின்றன. கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இவை யெல்லாம் உங்களின் பார்வைக்கு அபிவிருத்தியாகத் தெரியும்.

வீதியிலிருந்து இறங்கி உள்ளே சென்று பார்த்தால் உண்மை நிலைமை தெரியும் என்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அங்கு குறிப்பிட்டனர்.

ஐ.நா. குழுவிடம் அவர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு:

போரின் பின்னரான காலப் பகுதியில் போருக்குள் அகப்பட்ட மக்களுக்குச் சிவில் சமூகப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளபோதும் இலங்கை அரசு அந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

இலங்கை அரசு தொடர்ந்தும் இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த இன அழிப்பு பல்வேறு பட்ட வடிவங்களில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றது.தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்கள் இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றன. உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழர்களின் பெருமளவு நிலங்கள் பிடுங்கப்பட்டுள்ளன. சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இனப் பரம்பல் மாற்றியமைக்கப்படுகின்றது.



தமிழ் மக்களின் மொழியுரிமை புறக்கணிக்கப்படுகின்றது. நீதி நிர்வாகங்களில் அதிகரித்த அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றன. நாம் இனி எமது சொந்தக் காலில் நடக்க முயற்சிக்கின்றோம். சேகுவாரா நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கின்றான் என்றார்.

ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இனி எந்த ஆயுதம் தூக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகமே தீர்மானிக்கப் போகின்றது. இலங்கை அரசை தமிழர்கள் நம்பத் தயாரில்லை.

இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும் அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவதை நாங்கள் வரவேற்கின்றோம்.

கொழும்பு பெரதெனியா பல்கலைக் கழகங்களில் உள்ளதைப் போன்று மனித உரிமைக் கற்கை நெறி யாழ்ப்பாணத்திலும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள்.

இறுதியாக கருத்துத் தெரிவித்த ஐ.நா. துணைச் செயலாளர் நாயகம் போர் முடிந்த பின்னரும் தமிழ் மக்கள் இவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்பதை தெரிந்துகொண்டேன். இதனை ஐ.நாவுக்குச் சமர்ப்பிப்பேன்.

2009ஆம் ஆண்டு போர் முடிந்த பின்னர் இலங்கை வந்த போது போரை வெற்றி கொள்வது சுலபம் சமாதானத்தை வெல்வது கடினம் என்று இலங்கை அரசிடம் தெரிவித்திருந்தேன். அதை மீளவும் அரசுக்கு நினைவூட்டவுள்ளேன் என்றார்.

« PREV
NEXT »

No comments