Latest News

July 03, 2012

வவுனியா சிறை கைதிகள் குறித்து புதனன்று அவசர கலந்துரையாடல்
by admin - 0

வவுனியா சிறைச்சாலை அசம்பாவிதங்களின் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமது உறவுகளை கைவிட்டு விட்டீர்களா என தமிழ் அரசியல் தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்புகின்றார்கள்.

29ம் திகதி வெள்ளிக்கிழமை சம்பவத்தின் பின்னர் கைதிகள் வவுனியா சிறைக்கூடத்திலிருந்து அனுராதபுரம், மஹர ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர் எனவும், இந்த கைதிகளில் பலர் காயமடைந்து உள்ளதாகவும், உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படாமல் அவர்கள் பழி வாங்கப்படுவதாகவும், சிலர் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என தெரியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகளையடுத்து இந்த பதட்ட நிலைமை கைதிகளின் குடும்ப உறவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையை பற்றி ஆராய்ந்து உடன் நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களினதும், இந்த விவகாரத்தில் அக்கறை கொண்டுள்ள செயல்பாட்டாளர்களினதும் அவசர சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தமிழ் எம்பீகளையும், மக்கள் பிரதிநிதிகளையும், கட்சிகளின் பிரதிநிதிகளையும், சிவில் சமூக செயல்பாட்டாளர்களையும் இந்த சந்திப்பில் தவறாமல் கொள்ளும்படி மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளர் மனோ கணேசனும், இணைத்தலைவர் சிறிதுங்க ஜயசூரியவும், ஐதேகவின் துணை செயலாளர் மற்றும், கட்சியின் மனித உரிமை பொறுப்பாளர் ஜெயலத் ஜெயவர்த்தன எம்பியும் விடுத்துள்ள கூட்டு அழைப்பில் கோரியுள்ளனர்.

இந்த கூட்டம் கொழும்பு, கொள்ளுப்பிட்டி, எலோ அவனியூ, இலக்கம் 6 இல் அமைந்துள்ள CHRD என்ற மனித உரிமை இல்ல அலுவலகத்தில் ஜூலை 4ம் திகதி புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் என அனைத்து அழைப்பாளர்கள் சார்பாகவும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments