Latest News

June 10, 2012

தனி ஈழத்தை உருவாக்கும்வரை இணைந்தே வேலை செய்வோம்.
by admin - 0




புலம்பெயர் மக்கள் மற்றும் தமிழக மக்களுடன் சேர்ந்து ``தனித் தமிழ் ஈழத்தை உருவாக்குவோம், ஈழமே எங்கள் இறுதி நோக்கம்’’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.



நேற்று முன்தினம் வீக்கெண்ட் லீடர் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மேலும் தெரிவிக்கையில்:

இலங்கையில் ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தலைவராக இருந்தாலும் சிங்கள அரசியல்வாதிகள் சம மரியாதை கொடுத்து மதிப்பது கிடையாது.

இந்நிலையில், தமிழர்களோடு சிங்களவர்கள் சமாதான பேச்சுவார்த்தைக்கு வருவது எப்படி?. அப்படி வந்தாலும் அது எழுத்து மூலமாகவே இருக்கும். நேரடிப் பேச்சுவார்த்தையாக இருக்கமுடியாது.

சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தை கூட சர்வதேசத்தின அழுத்தம் காரணமாகவே நடந்தது. சர்வதேச சமூகமும் இந்தியாவும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு காணமுடியுமே தவிர, சிங்களவர்களால் தமிழர்களுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கப் போவதில்லை.

நாட்டில் தற்போதைய நிலையில், முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசினால் படுகொலைசெய்யப்பட்ட ஈழ மக்களுக்கான துக்கநாளைக்ககூட அனுஸ்டிக்க சுதந்திரம் இல்லை. தற்போதும் இராணுவத்தினரின் கண்காணிப்பிலேயே யாழ். பல்கலைக்கழகம் காணப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் மாணவர்களுக்கு புத்தகம் கொடுப்பதற்காக பாடசாலைக்காக சென்றபோது, இராணுவத்தினர் சுற்றி நின்று படம் எடுத்தனர். பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களுக்கு எப்படி இருக்கும். இதை எப்படி சுதந்திரமான நாடு என்று சொல்ல முடியும். எனக்கே இந்த நிலைமை என்றால் மக்களுக்க சுதந்திரம் எங்கே சுதந்திரம் இருக்கப் போகிறது.

சிங்களவர்கள் புத்தரின் கொள்கைகளையும் பாராம்பரியங்களையும் தமிழர்களிடம் திணிக்க நினைக்கின்றனர். இவ்வாறு அரசாங்கம் செய்வதனால் காலப்போக்கில் தமிழர்கள் வெளிநாட்டவர்களாக கருதப்படுவார்கள்.

இதேவேளை, தமிழ் பெண்களை இராணுவத்தினர் திட்டமிட்டு குறி வைத்துள்ளார்கள். 9 வயது குழந்தையைக் கூட துஸ்பிரயோகம் செய்கின்றார்கள். இளவயதில் நிறைய தமிழ் பிள்ளைகள் கர்ப்பம் தரிக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் அப்பா யாரென்னறால் இராணுவத்தினரே. இவ்வாறான நிலையே தமிழர்களுக்கு காணப்படுகிறது.

சிங்களவர்கள் தமிழர்களின் கலாசாரத்தையும் மூலதனத்தையும் அடியோடு இல்லாமல் செய்வதற்கு திட்டமிட்டு இவ்வாறான செயல்கள் செய்யப்படுகின்றது.

இராணுவ முகாமெல்லாம் தற்போது பாடசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால் எவ்வாறு பாடசாலை இயங்கும். அடிமை உணர்வு மிகவும் பயங்கரமாக நடத்தப்படுகின்றது. இவ்வாறு நடந்து கொண்டிருந்தால், இன்னும் மூன்று வருட இறுதியில், தமழிர்கள், தமது கனவு, அமைதி, கலாசாரம் எல்லாவற்றையும் இழந்து ஒரு அனாதையைப் போல தாய் நாட்டில் இருப்பார்கள்.

அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சிங்களக் கொடியை ஏந்தியமைக்கு சர்ச்சைகள் எழுந்தன.

1987 – 2002 வரை விடுதலைப்புலிகள் அரசாங்கத்திடம் பகிரங்கமாக சவால் விடுத்தார்கள். ஆனால் நாம் அமைதியான சூழலையே எதிர்பார்க்கிறோம். ஏனெனில், தற்போது இருக்கும் எந்த மக்களையும் இழக்க விரும்பவில்லை. எமது கட்சியில் பாகுபாடு இருந்தாலும், தனி ஈழத்தை உருவாக்கும்வரை இணைந்தே வேலை செய்வோம்.

நாட்டில் தற்போது நடைபெறும் செயற்பாடுகளை நோக்கும் போது, நம்மை பலப்படுத்தவேண்டிய தேவை உள்ளது.

ஏனெனில் மூன்று லட்சம் பேர் போரில் தியாகம் செய்துள்ளனர். 90ஆயிரம் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். 25ஆயிரம் அநாதையாக உள்ளனர். இதில் 40 ஆயிரம் போராளிகளை இழந்துள்ளோம்.

ஆனால், சிஙகள அரசாங்கம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படியே போனால் இந்த நாடு சிங்கள அரசாங்கத்தின் கையிலேயே போகும். நமது கௌரவத்தையெல்லாம் விட்டு அவர்களோடு போக வேண்டும். அல்லது நமது வழியில் நாம் செல்ல வேண்டும்.

எனவே ஈழமே எமது இலக்கு, அதற்காக நாம் பாடுபட்டு உழைத்தே ஆகவேண்டும் என வீக்கெண்ட் லீடருக்கு பா.உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments