Latest News

April 30, 2012

நெற்பயிரில் வேதியியல் சாரா பூச்சிக்கட்டுப்பாடு முறைகள்
by admin - 0



விளக்குப்பொறி: பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்திழுக்கவும் விளக்குப் பொறிகளைப் பயன்புடுத்தலாம். தேவையில்லாத பொருட்களை வயலில் ஒரு ஓரமாகக் குவித்து மாலை வேளைகளில் தீ மூட்டி விளக்குப் பொறியாகப் பயன்படுத்தலாம். மேலும் அரிக்கேன் விளக்கு மற்றும் மின்சார விளக்குகளையும் பொறியாகப் பயன்படுத்தலாம். இந்தப் பொறிகளை மாலை ஐந்தரை மணிக்கு மேல் வயலில் வைக்க வேண்டும். தாய் அந்துப் பூச்சிகள் விளக்கின் வெளிச்சத்தினால் கவரப்படும். இந்த முறையில் தாய்ப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். விளக்குப் பொறிகளின் அருகில் ஒரு பெரிய தட்டு அல்லது பாத்திரத்தில் கொஞ்சம் மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் வைக்க வேண்டும்.
* மஞ்சள் ஒட்டுப்பொறி: மஞ்சள் இரும்புத்தகடு அல்லது மஞ்சள் டப்பாக்களில் ஆமணக்கு எண்ணெயை தடவி வயலில் வைக்க வேண்டும். இந்த நிறத்தினால் கவரப்படும் வெள்ளை ஈக்கள் மற்றும் தத்துப்பூச்சிகள் அந்தப் பொறிகளில் ஒட்டிக் கொள்ளும். ஒவ்வொரு நாளும் ஒட்டிக்கொள்ளும் பூச்சிகளை துடைத்து எடுத்துவிட்டு மீண்டும் எண்ணெய் தடவவேண்டும்.
* பறவை தாங்கி (பறவை ஆசனம்): நீளமான காய்ந்த குச்சிகளைக் கொண்டு "டி' வடிவ பறவை தாங்கிகளை (ஒரு ஏக்கருக்கு 15-20) வயலில் வைக்க வேண்டும். இவற்றில் பறவைகள், ஆந்தைகள் வந்து உட்கார வசதியாக இருக்கும். இவற்றில் உட்காரும் பறவைகள் வயலில் காணப்படும் புழுக்கள் மற்றும் எலிகளை உண்டு அவற்றைக் கட்டுப்படுத்தும்.
* கையால் சேகரித்து அழித்தல்: சாகுபடி பரப்பரளவு குறைவாக இருக்கும்பொழுது இந்த முறையைப் பயன்படுத்தலாம். பாலிதீன் பைகளில் தண்ணீருடன் சிறிதளவு மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும். மாலை நேரங்களில் வயல்களில் காணப்படும் புழுக்கள் மற்றும் முட்டைக்குவியல்களைச் சேகரித்து மண்ணெண்ணெய் சேர்க்கப்பட்ட இந்தப் பைகளில் போட்டு அழிக்கலாம். பூச்சித் தாக்குதல் குறைவாக இருக்கும்பொழுதே இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும்
« PREV
NEXT »

No comments