திமுகவின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு எந்த பதவி கொடுத்தாலும் அதை அழகுபடுத்தியதால் தான் மு.க. ஸ்டாலினை தலைவராக எற்றுள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ''தங்க தளபதியே திரும்பி பார்க்கிறோம், திகைத்து நிற்கிறோம்'' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை துவக்கி வைத்து முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது,
1961ம் ஆண்டு நான் திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்றிருந்தபோது ஸ்டாலின் 10 வயது சிறுவனாக இருந்தார். அவர் தனது தோழர்களுடன் சேர்ந்து கட்சிப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அவர் ஒன்றும் திடீர் என்று தலைவராகிவிடவில்லை. திருமணமான 6வது மாதத்தில் மனைவியைப் பிரிந்து கட்சிக்காக சிறை சென்று சித்ரவதைகள் அனுபவித்தார். கட்சியின் ரத்தநாளமாக இருக்கும் இளைஞர் அணியைத் துவக்கி திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டார்.
சட்டமன்ற உறுப்பினர், மேயர், உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதல்வர், திமுக பொருளாளர் என எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் அதை அழகு படுத்தியவர். அதனால் தான் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளோம். நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தை இரண்டாம் நூற்றாண்டுக்கு அழைத்து செல்கிறார் என்றார்.
கருத்தரங்கில் சு.ப.வீரபாண்டியன், லியோனி சுமதிஸ்ரீ உள்ளிட்ட பலர் பேசினர்.
No comments
Post a Comment