Latest News

March 06, 2012

பணம் பறிக்க அல்போன்சாவுடன் எனது மகனை பழக விட்டார் ராபர்ட்-
by admin - 0


எனது மகன் தீராத சினிமா ஆசையில் இருந்தான். அவனிடமிருந்து பணம் பறிப்பதற்காக தனது அக்காள் அல்போன்சாவுடன், வேண்டும் என்றே பழக விட்டார் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட். அக்காளும், தம்பியுமாக சேர்ந்து பல லட்சம் பணத்தைப் பறித்துள்ளனர். இப்போது உயிரையும் பறித்து விட்டனர் என்று வினோத்குமாரின் தந்தை பாண்டியன் கூறியுள்ளார்.

அல்போன்சா வீட்டில் மர்மமான முறையில் இறந்த அவரது காதலர் வினோத்குமார் சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் பாண்டியன். தாயார் பெயர் ராஜேஸ்வரி. ஒரே ஒரு தம்பி, பெயர் மோகன். பாண்டியன், ரியல் எஸ்டேட் அதிபராகவும், திருக்கழுக்குன்றம் நகர அதிமுக எம்.ஜிஆர். மன்ற இணைச் செயலாளராக இருக்கிறார்.

தனது மகனின் உடலைப் பார்த்து கதறி அழுத பாண்டியன் தனது மகன் குறித்துக் கூறுகையில், சினிமாவில் பெரிய நடிகராக வரவேண்டும் என்று எனது மகன் வினோத் குமார் மிகவும் வெறியோடு இருந்தான். அதற்காக கடுமையாக உழைத்து வந்தான். இதற்காக லட்சக்கணக்கில் நான் அவனுக்கு பணம் கொடுத்தேன்.

ராபர்ட் அறிமுகம் மகனுக்கு எப்போது கிடைத்ததோ அப்போது இருந்து எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டான். என் மகன் நன்றாக நடனம் ஆடுவான் என்பதால் ராபர்ட் இயக்கிய ஒரு ஆல்பத்தில் மகன் நடித்தான். இதையடுத்து வினோத்குமார் சினிமாவில் நடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பதை அறிந்து கொண்டு ராபர்ட் அல்போன்சாவை அவனுடன் பழக வைத்துள்ளார்.

பின்னர் 2 பேரும் சேர்ந்து என் மகனிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியுள்ளனர். இந்நிலையில் நல்ல கதை ஒன்று உள்ளது அதனை தயாரித்து நீயே நடி என்று ராபர்ட் கூறியுள்ளார். ஆனால் அதற்கு என் மகன் சம்மதிக்கவில்லை. எப்படியோ மிரட்டி அவனை அந்த படத்திற்கு பூஜை போட வைத்துள்ளார். படத்தின் பெயர் சங்கு. இதில் அல்போன்சாவும் நடிக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அல்போன்சா எனது மகன் மோகனுக்கு போன் செய்து, உனது அண்ணன் வினோத் தற்கொலை செய்து விட்டார் என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பதற்றத்துடன் அல்போன்சா வீட்டிற்கு காரில் வந்தேன். அப்போது அல்போன்சா மகனின் உடலை வீட்டில் விரிக்கும் பெரிய மிதியடி ஒன்றால் மூடி வைத்திருந்தார். நான் திறந்து பார்த்த போது மூக்கு, காது, வாய் போன்றவற்றில் ரத்த காயம் இருந்தது. என் மகனை கொன்று விட்டாயே என்று அவருடன் வாக்குவாதம் செய்தேன்.

அல்போன்சாவுடன் சேர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் எனது மகன் கேட்கவில்லை. அவனது சினிமா ஆசை நிராசையாகி விட்டது என்று கூறினார்.
« PREV
NEXT »

No comments