காதலர் வினோத்குமார் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளதால் நடிகை அல்போன்சாவை தீவிரமாக விசாரிக்க போலீஸார் காத்துள்ளனர். அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் விசாரணை தொடங்கும். விசாரணையின் இறுதியில்தான் அவர் கைதாவாரா இல்லையா என்பது தெரிய வரும்.
வினோத்குமாரும், அல்போன்சாவும் திருமணம் செய்து கொள்ளாமலேயே விருகம்பாக்கம் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென வினோத்குமார் தூக்கில் தொங்கி விட்டார். பதறியடித்து கல்பாக்கத்திலிருந்து ஓடி வந்த வினோத்குமாரின் குடும்பத்தினர் மகனின் பிணத்தைப் பார்த்து கதறியழுதனர். அல்போன்சாதான் தனது மகனின் மரணத்திற்குக் காரணம் என்று வினோத்தின் தந்தை பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக போலீஸிலும் அவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், வினோத்குமார் கொலை செய்யப்படவில்லை என்றும் அவர் தற்கொலைதான் செய்துள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும் அவரை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது யார் என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது. இதனால் அல்போன்சாவை தீவிரமாக விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் போலீஸார் உள்ளனர். ஆனால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் டிஸ்சார்ஜ் ஆனவுடன் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
இதற்கிடையே, அல்போன்சாவின் வக்கீல் ரவீந்திரநாத் ஜெயபால் கூறுகையில், அல்போன்சா இதில் எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார். வினோத்குமாரை திருமணம் செய்துகொள்வதில் அல்போன்சா உறுதியாக இருந்தார் என்பது எனக்கு தெரியும். வினோத்குமாரிடம் பணம் பறிக்கும் நோக்கமும் அல்போன்சாவுக்கு இல்லை. வினோத்குமாரும் பணத்தை வாரி வழங்கும் அளவுக்கு வசதியானவர் அல்ல.
அல்போன்சாவுக்கு வளசரவாக்கத்தில் சொந்த வீடு ஒன்று இருந்தது. அதை ரூ.40 லட்சத்துக்கு விற்று அதில்தான் அவர் தற்போது வாழ்ந்து வந்தார். அல்போன்சா தயவில்தான், வினோத் வாழ்ந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றார் அவர்.
ஆனால் தற்கொலைக்குத் தூண்டியவர் என்று அல்போன்சா மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறு.
வரும் நாட்களில் அல்போன்சாவின் கதி என்ன என்பது தெரிய வரும்.
No comments
Post a Comment