Latest News

March 19, 2012

உண்மையைக் கூறமுடியாத கட்டத்தில் நிற்கும் தமிழினம் -உதயன்
by admin - 0

"வீட்டுத்திட்டம் தருவதற்கு யாழ்ப்பாணத்தில் பதிய வேணும் நாளைக்கு என்று கூறித்தான் எங்களை இராணுவத்தினர் வரச்சொன்னார்கள் நான் காலமை வரும்போது பிந்தி விட்டது அதனால் என்னை விட்டிட்டு வந்திட்டினம் நான் வீட்டுத்திட்டத்திற்கு கட்டாயம் பதிய வேணும் எண்டு என்ரை காசைக் கொடுத்து பஸ்சில வந்தனான் ஆர்ப்பாட்டம் என்று தெரியாது இங்க வந்தாப் பிறகுதான் அர்ப்பாட்டம் என்று தெரியும் நல்லா ஏமாத்தீட்டாங்கள்"

இது கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு ஏழைத்தாயின் உள்ளக் குமுறல். இவ்வாறு தான் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு மக்களிடத்திலும் இருந்த ஆதங்கமாக இருந்தது. கனவுகளுடன் குழந்தைகளையும் கொழுத்தும் வெய்யிலில் அழைத்துக்கொண்டு எத்தனையோ தாய்மார் வந்திருந்தனர்.


மனதில் ஆதங்கத்தை சுமந்து கொண்டு வெளியில் உண்மையைக் கூறுவதற்கு தைரியமற்ற திராணிகளாக நின்றார்கள். நன்றாக எங்களை ஏமாற்றி விட்டார்கள் என தட்டிக் கேட்ட ஆளில்லாது தம்மைத் தாமே நொந்து கொண்டனர்


கூட்டம் என்றால் அமைச்சர்கள் யாராவது வருவார்கள் தமது குறைகளைக் கூறி தீர்த்துக் கொள்ளலாம் என்று கற்பனைகளுடன் வந்தவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டும் தான்.

கடந்த சனிக்கிழமை ஆளும் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.அங்கஜன தலைமையிலான அணி ஜெனீவாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இதற்கு தென்மாகாணம் உட்பட நாடளாவிய ரீதியில் இருந்தும் பெருந்தொகையான மக்கள் இராணுவத்தினராலும் கட்சி ஆதரவாளர்களினாலும் உண்மைக்கு புறம்பான கதைகளைக் கூறி அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி அழைத்து வரப்பட்டனர்.


இது மட்டுமல்ல தமது சொந்தத் தேவைகளுக்கான வீதியால் சென்றவர்கள் இராணுவத்தினரால் பிடித்து பலவந்தமாக ஏற்றப்பட்டனர். அடையாள அட்டைகளை பெற்றுக் கொண்டு தமது முகாம்களுக்கு வருமாறு கட்டளையிட்டனர் இவர்களை எல்லாம் திரட்டிய கூட்டமே இங்கு பெருந்தொகையாகி நின்றது.

உண்மையைச் சொல்லி இருந்தால் ஒரு பத்துப் பேர் கூட வந்திருக்க மாட்டார்கள்.


எவ்வாறெல்லாம் அரசினால் எமது அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.


இத் தருணத்தில் மக்களது யதார்த்த நிலைமையினைக் கேட்டறிய முனைந்த ஊடகவியலாளர்களும் காவற்றுறை, சீ. ஐ. டி என்று குறிப்பிடப்பட்ட சிலரினால் சோதனையிடப்பட்ட சம்வமும் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments