Latest News

March 21, 2012

ஐ நா தீர்மானத்துக்கு வட பகுதி மக்கள் ஆதரவு
by admin - 0

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் வடக்கில் உள்ள மக்கள் பல வகையான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்கள். மூன்று வருடங்கள் முடிந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை பெரும்பாலான தமிழர்கள் வலியுறுத்துகின்றார்கள். அந்த வகையில் அமெரிக்காவின் பிரேரணையைத் தாங்கள் வரவேற்பதாக அவர்கள் கூறுகின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு அரசு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்றும் ஒருவர் தெரிவித்தார். போரின் இறுதிக் காலத்தில் பிணங்களின் மீது தாம் நடந்து வந்ததாக கண்ணீரோடு குறிப்பிட்ட மற்றொருவர் பல பிணங்கள் பதுங்குகுழிகளிலேயே புதைக்கப்பட்டதாகக் கூறினார்.கட்டாய ஆள்சேர்ப்பு உள்ளிட்ட சில விடயங்களை விடுதலைப் புலிகள் செய்தார்கள் என்றாலும் அரசு தரப்புதான் அதிக அளவிலான அழிவுகளை ஏற்படுத்தியது என்று தமிழோசையிடம் தெரிவித்த ஒரு பெண்மணி, இனியாவது மக்களுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்றார். கடந்த கால சம்பவங்களுக்கு பொறுப்பு சுமத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
போர் முடிந்தும் வடக்கில் தொடர்ந்து அதிக அளவிலான இராணுவத்தினர் இருப்பதால் சுதந்திரமாக நடமாடமுடியவில்லை தம்மால் சுதந்திரமாக ஏதும் கருத்து கூற முடியவில்லை என்றும் வேறு சிலர் கூறினர்.
சிங்களவர் கருத்து
வவுனியாவைச் சேர்ந்த சிங்களவரான ஒருவர் கருத்து தெரிவிக்கையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற அதேவேளை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மட்டுமே நீதி வழங்கப்பட வேண்டும் என்ற தோரணையில் இந்த பிரேரணை அமைந்திருப்பது வருத்தத்திற்குரியது என்றார். .
"யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தமிழ் மக்களைப் பற்றி மட்டுமே பேசப்படுகின்றது. ஆனால் சிங்கள மக்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களைப் பற்றி பேசுவதற்கு எவருமில்லை. அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக நீதி வழங்குமாறு கேட்பதற்கும் எவருமில்லை. யுத்த காலத்தில் பௌத்த குருமார்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களது கொலைக்குக் காரணமானவர்கள் இன்று பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள். ஆனால் சிங்கள மக்களுக்கு நீதி வழங்குவதற்குத்தான் எவருமில்லை" என்றார் அவர்.

தமிழோசை
« PREV
NEXT »

No comments