Latest News

February 23, 2012

தமிழகத்திலேயே மிகப் பெரிய போலீஸ் என்கவுண்ட்டர் இதுதான்
by admin - 0

சென்னை: இதுவரை தமிழகத்தில் நடந்த போலீஸ் என்கவுண்ட்டரிலேயே மிகப் பெரியது இன்று அதிகாலையில் சென்னை வேளச்சேரியில் நடந்த என்கவுண்ட்டர்தான். மேலும் தமிழகத்தி்ல போலீஸாரால் ஒரே நேரத்தில் 5 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

சென்னை புறநகர்களில் உள்ள இரு வங்கிகளில் ஒரு மாத இடைவெளியில் துணிகரமாக கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் போலீஸாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து இந்த வழக்குகளை சவாலாக எடுத்து விசாரணையைத் தொடங்கிய போலீஸார் அதி தீவிரமாக விசாரணை நடத்தினர்.வரலாறு காணாத வகையில் 40 தனிப்படைகளை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டனர். கொள்ளை நடந்த இரு வங்கிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத நிலையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வங்கிக் கிளைகளில் பதிவான காட்சிகளை ஒரு யூகமாக பரிசோதித்தபோது போலீஸாருக்கு பெரும் துப்பு கிடைத்தது. கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த ஒருவன் அந்தக் காட்சியில் இருந்தது தெரிய வந்தது. அதை உறுதிப்படுத்திக் கொண்ட போலீஸாருக்கு கொள்ளையர்கள் பதுங்கியிருந்த வீடு குறித்தத் தகவலும் விரைவிலேயே கிடைத்தது. இதையடுத்து கொள்ளையர்களை என்கவுண்ட்டர் மூலம் சுட்டு வீழ்த்தினர்.

தமிழகத்தில் இதுவரை இவ்வளவு பெரிய என்கவுண்ட்டர் இதுவரை நடந்ததில்லை. அதிலும் சென்னையில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

அதேசமயம், தமிழக போலீஸார் என்கவுண்ட்டர் மூலம் 5 பேரை சுட்டுக் கொல்வது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு 2002ம் ஆண்டு பெங்களூரில் தமிழக போலீஸார் இமாம் அலி உள்ளிட்ட ஐந்து பேரை என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடைசியாக நடந்த என்கவுண்டர் என்பது கோவையில், சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற நபரை கோவை போலீஸார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்ற சம்பவம்தான். மேலும் கடந்த 2010ம் ஆண்டு திண்டுக்கல் பாண்டி என்ற ரவுடி உள்ளிட்ட 2 பேரை நீலாங்கரையில் வைத்து போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
« PREV
NEXT »

No comments