Latest News

February 22, 2012

காதலில் சொதப்புவது எப்படி? - விமர்சனம்
by admin - 0


ஜாலியான படம். காதலர்களுக்கு இடையே நடக்கும் ரகளையான விஷயங்களை படமாக்கிய விதம் அருமை. காதலில் சொதப்புவது எப்படி? என்ற குறும்படத்தில் இருந்து பிறந்ததே இந்த திரைப்படம்.ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள். இருவருக்கும் இடையே சண்டைவருகிறது ( வந்தே தீர வேண்டும் ). யார் விட்டுக்கொடுப்பது என்ற ஈகோ பிரச்சனை. கடைசியில் காதல் கைகூடுகிறது. இதை எத்தனை படங்களில் பார்த்திருக்கிறோம் என்ற கேள்வி எழலாம். ஆனால், இது புதுசு என்றே சொல்ல முடியும்.இந்தகாலத்து காதலில் காதலி காதலனுக்கு அதிகபட்சமாக போடும் கண்டீஷன்கள் இதுதான். எந்த வேலையாக இருந்தாலும் அதை விட்டுவிட்டு காதலியோடு ஷாப்பிங் போக வேண்டும். சந்திக்க முடியாத சமயத்தில் அடிக்கடி போன் பண்ணி பேசனும். என்ன ஆனாலும், உலகமே அழிந்தாலும் எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கிட்டே இருக்கனும்! இந்த மாதிரி கடமைகளை காதலன் செய்யாவிட்டால் காதல் கட்! இதே மாதிரி ஒரு பிரச்சனை தான் இவர்கள் காதலிலும்.

சந்தோஷத்தின் பிறப்பிடம் என அருண் வீட்டை சொல்லலாம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் செல்லப்பிள்ளையாக சித்தார்த் (அருண்). அமலா பாலுடன் (பாரு என்கிற பார்வதி) சித்தார்த் நட்புக்கொண்டிருப்பதை கண்டு சித்தார்த்தின் பெற்றோர் மகிழ்கின்றனர். இதனிடையே சித்தார்த்-அமலா பால் நட்பு காதலாக மாறுகிறது.

அமலா பால் வீடோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இவரது அப்பாவும் அம்மாவும் காதலித்து திருமணம் செய்திருந்தாலும், இருவருக்குள்ளும் ஏற்படும் பிரச்சனைகளால் விவாகரத்து வரை
போய்விடுகிறார்கள்.

இந்நிலையில் தனித்து விடப்படும் அமலா பால் சித்தார்த்தின் அன்பை நாட, அவரோ அவரை அறியாமல் அமலா பாலை தவிர்த்து விடுகிறார். இதற்கு முன் சிறு சிறு சொதப்பல்களால் சண்டையிட்டு பின் சேர்ந்து கொண்டாலும் இந்த நிகழ்வால் இருவரும் பிரிந்து விடுகிறார்.

சொதப்பலில் விழுந்த காதல் என்ன ஆனது? அமலா பாலின் பெற்றோர்கள் நிலை என்ன ஆனது? என்பதை சொல்லி சுபம் போட்டிருக்கிறார் அறிமுக இயக்குனரான பாலாஜி மோகன். அருண் என்ற கேரக்டரில் வரும் சித்தார்த் அப்பிராணி காதலன் வேடத்தில் அசத்துகிறார்.

காதலி பிரிந்து விட்டாளே. அதை மறக்க என்ன செய்ய வேண்டும் என்று நண்பர்களிடம் ஆலோசனை கேட்க, அவர்களில் 75 சதவீதம் பேர் தண்ணியடிக்க சொல்கின்றனர். அப்போது ”ஏற்கனவே என் இதயம் டேமேஜ் ஆயிடிச்சி, இதனால் என் கிட்னியையும் டேமேஜ் செஞ்சுக்க விரும்பல” எனும்போது பளிச்சென மனதில் நிற்கிறார்.

பார்வதியாக வரும் அமலாபால் கல்லூரி மாணவி பாத்திரத்தில் கச்சிதமாய பொருந்துகிறார். எதார்த்தமான நடிப்பிலும் அமலா பால் அசத்துகிறார்.

அமலா பாலின் அப்பாவாக வரும் சுரேஷ் மனைவியோடு சேரும் போது ‘வளையோசை கலகலகலவென...’ என்று பாடல் ஒலிக்கிறதே அது அற்புதமான காட்சியமைப்பு. சித்தார்த்தின் பெற்றோர் அமலா பாலை பார்த்ததுமே, பேசும் விதமும், நீயும் என் பையனும் ப்ரண்ட்ஸாமே! நானும் என் மனைவியும் கூட காலேஜ் படிக்கும் போது ப்ரண்ட்ஸாதான் இருந்தோம்! என்று சொல்லுவது செம கலாட்டா.

சித்தார்த்தின் நண்பனாக வரும் விக்னேஷ், காதலை சொல்லும் நேரத்தில் அந்த பொண்ணு அண்ணான்னு கூப்பிட்டுவது கலாய்ப்பு. நூலகத்தில் புத்தகம் எடுக்கிற காட்சி சூப்பர். எப்போ பார்த்தாலும் பெண்களிடம் அரை வாங்கும் இன்னொரு நண்பன் அர்ஜூன் ஒவ்வொரு வசனத்திலும் சிரிக்க வைக்கிறார்.

அதிகம் இம்சை கொடுக்காத அளவான பாடல்கள் ஆறுதலான விஷயம். நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்தின் தனித்துவம்.

காதலில் சொதப்புவது எப்படி? - ரசிக்க வைக்கும் சொதப்பல்
« PREV
NEXT »

No comments