Latest News

February 24, 2012

போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர் பீகாரில் உயிருடன்
by admin - 0

என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையனின் பெயர், முகவரியில் பீகாரில் கார் டிரைவர் வசிப்பது விசாரணை யில் தெரியவந்துள்ளது. எனவே, கொல்லப்பட்டவரின் உண்மையான பெயர், விவரம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இதற்காக தனிப்படை போலீசார் பீகார் விரைகின்றனர்.

சென்னை பெருங்குடி மற்றும் கீழ்கட்டளை வங்கிகளில் ரூ.39 லட்சத்தை கொள்ளையடித்த 5 பேரை வேளச்சேரியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கிடைத்த அடையாள அட்டையில் பீகார் மற்றும் மேற்குவங்க முகவரிகள் இருந்தன.

இரு மாநில டிஜிபிகளுக்கும் சென்னை போலீசார் தகவல் தெரிவித்து விசாரிக்கும்படி கூறினர். ஒரு அடையாள அட்டையில் சந்திரிகா ரே, தந்தை பெயர் கிரிபாலி ரே, மாஜிபூர், பத்துகா மாவட்டம், பீகார் என்ற முகவரி இருந்தது. அங்கு சென்று போலீசார் விசாரித்தனர்.

அந்த முகவரியில் கார் டிரைவர் ஒருவர் வசிக்கிறார். அவரது பெயர், தந்தை பெயர், முகவரி எல்லாம் சரியாக உள்ளது. எனவே, சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்டவர், சந்திரிகா ரே பெயர், முகவரியில் போலி அடையாள அட்டையை தயாரித்திருப்பது தெரியவந்துள்ளது.

அவரது உண்மையான பெயர், முகவரி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர், பீகாரில் உயிருடன் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற அடையாள அட்டைகளில் இருந்த முகவரிகளும் போலி என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொள்ளையர்களின் செல்போன் ஒன்றும் போலீசில் சிக்கியது. அது, கொள்ளை கும்பல் தலைவன் வினோத்குமார் பெயரில் இருந்தது. போலி முகவரி கொடுத்து சிம்கார்டு வாங்கியிருந்தார். செல்போனில் பதிவாகி இருந்த நம்பர்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

பீகாரை சேர்ந்த குறிப்பிட்ட எண்ணுக்கு அடிக்கடி பேசியது தெரியவந்தது. அந்த எண்ணில் தனிப்படை போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். எதிர்முனையில் பேசியவர், இந்தியில் பேசினார். அவர், வினோத்குமாரின் உறவினர் என்று தெரிந்தது. அவரை சென்னைக்கு வருமாறு போலீசார் அழைத்தனர்.

‘எங்களை போலீசார் கைது செய்யக் கூடாது. ஏற்கனவே கொள்ளையடிக்கப்பட்ட ரூ.25 லட்சத்தை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அதுபற்றி எங்களிடம் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது. அதற்கு ஒப்புக் கொண்டால், நாங்கள் சென்னை வருகிறோம்’ என அவர் கூறியுள்ளார்.

போலீசாரும் நீங்கள் வந்து வினோத்தின் உடலை மட்டும் வாங்கிச் செல்லுங்கள் என்றனர். இன்று மாலை விமானத்தில் அவர்கள் சென்னை வருவதாக தெரிவித்துள்ளனர். உறவினர்கள் வந்த பிறகுதான் வினோத் பற்றிய முழு விவரங்களும் தெரியும். இதற்கிடையே, மற்ற 4 கொள்ளையர்கள் பற்றி விசாரிக்க உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை போலீசார் பீகார் மற்றும் மேற்கு வங்கத்துக்கு இன்று பிற்பகலில் செல்கின்றனர்.

கொள்ளையர்கள் மீது அங்கு வேறு வழக்குகள் உள்ளதா என்பது பற்றியும் விசாரிக்கின்றனர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள கொள்ளையர்களின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. 5 பேரின் விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களது உடல்களை மாஜிஸ்திரேட் பார்வையிட்டு, குண்டு காயம் பற்றி ஆய்வு செய்கிறார்.

சகஜ நிலை திரும்பியது

கொள்ளையர்கள் என்கவுன்டர் செய்யப்பட்ட வேளச்சேரி நேரு நகர் பகுதியில் சகஜநிலை திரும்பியது. சம்பவம் நடந்த ஏ.எல்.முதலி 2-வது தெருவில் வசிப்பவர்கள் நேற்று முழுவதும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். பலர் வேலைக்கு செல்லவில்லை.

பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பவில்லை. போலீஸ் அதிகாரிகள் வருகை, மாஜிஸ்திரேட் விசாரணை, பத்திரிகையாளர்கள் நடமாட்டம், பொதுமக்கள் படையெடுப்பு என நேற்று முழுவதும் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

இன்று காலை அங்கு நிலைமை சீரானது. ஒரு சில போலீசாரே பாதுகாப்புக்கு இருக்கின்றனர். மக்கள் தங்கள் வழக்கமான பணிகளை கவனித்து வருகின்றனர்.

அடையாளம் காட்டுகின்றனர்

கொள்ளையர்கள் 5 பேரின் உடல்களும் அரசு பொது மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. கொள்ளை நடந்த கீழ்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் சண்முகசுந்தரம் மற்றும் ஊழியர்கள், கொள்ளையர் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் பார்வதி ஆகியோர் இன்று உடல்களை பார்வையிட்டு அடையாளம் காட்டுகின்றனர். அவர்களிடம் மாதிஸ்திரேட் கீதாராணி விசாரணை நடத்த உள்ளார். பிரேத பரிசோதனை நடக்கவுள்ள அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments