இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' ஆவணப்படத்தை இந்த ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும், ஆஸ்திரேலியாவின் கிறின் சென்ட்டர் லீ றியனோனும் இணைந்து நோர்வேயின் நோபல் பரிசுக் குழுவுக்கு இந்தப் பரிந்துரையை அனுப்பியுள்ளனர்.
சரியான நேரத்தில் சனல்4 வெளியிட்ட இந்த ஆவணப்படம் இலங்கை அரசின் அனைத்துலக மனித உரிமை மீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாகவும், இது இலங்கையில் உள்ள எல்லா மக்களுக்கும் உண்மை, நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றுக்குப் பங்களிப்பு செய்துள்ளதாகவும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் மக் டொனா தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணப்படத்தை நோபல் பரிசுக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதன் மூலம், இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து உலகின் கவனத்தை ஈர்ப்பதுடன், அங்கு நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நீதியையும், அமைதியையும் கொண்டு வரும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment