Latest News

February 16, 2012

பாடசாலையை விட்டு மாணவர்கள் இடைவிலக கூடாது; ஒட்டுசுட்டான் கோட்டக் கல்விப் பணிப்பாளர் த.பங்கயற்செல்வன்.
by admin - 0

பாடசாலையை விட்டு இடைவிலகி பிள்ளைகள் வீட்டில் நிற்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது பாடசாலைக்கு அனுப்பி பிள்ளைகளது கல்வியை தொடர்வதற்கு நடவடிக்கை எடுங்கள் என பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஒட்டுசுட்டான் கோட்டக் கல்விப் பணிப்பாளர் த.பங்கயற்செல்வன்.

கற்சிலைமடு அ.த.க. பாடசாலையில் இடம்பெற்ற இல்ல மெய்வன்மைப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கற்சிலைமடுவை அண்டிய கிராமங்களில் வசிக்கின்ற மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகிச் செல்வது அதிகரித்துக் காணப்படுகின்றது. 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் எந்தக் காரணம் கொண்டும் பாடசாலைக்குச் செல்லாது வீட்டில் நிற்பதைப் பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது.

வழக்கமாக இந்தப் பிரதேசத்திலிருந்து உத்தியோகத்தர்களினதும், வசதி படைத்தவர்களினதும் பிள்ளைகளே பல்கலைக்கழகங்களுக்குச் சென்று வந்தனர். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. குக்கிராமங்களைச் சேர்ந்த சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் பல்கலைக் கழகங்களுக்குத்தெரிவு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது.

இந்தப் பாடசாலை வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. கற்சிலைமடு அ.த.க. மற்றும் திருமுறிகண்டிப் பாடசாலை ஆகியவற்றை நாம் அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்துள்ளோம்.

க.பொ.த. உயர்தரத்தில் கற்சிலைமடுவும், தரம் 5 புலமைப் பரீட்சையில் ஆறுமுகம் வித்தியாலயமும் முன்னணியில் உள்ளன. இது எமக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.

வசந்தபுரம் கிராமத்திலிருந்து கூட, ஒரு பிள்ளை பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியுள்ளார். இந்தப் பிரதேசத்தைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள்தான் வசந்தபுரத்தைப் பற்றி அறிவார்கள்.

மேலும் எதிர்காலத்தில் இந்தப் பாடசாலை மேலும் வளர்ச்சியடைந்து சாதனைகள் ஈட்டுவதற்கு, எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments