இந்திய மாநிலமான கேரளாவில் விவசாயி ஒருவரின் எருமை மாடு கடந்த 10ம் திகதி வெள்ளைக் கன்று ஈன்றுள்ளது. இந்த அதிசயக் கன்றை வளர்க்கத் தேவையான உதவியை செய்ய அம்மாநில அரசு முன்வந்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட அஞ்சால் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஷர்புதீன். அவர் கடந்த ஆண்டு இப்பகுதியில் உள்ள மாட்டு சந்தையில் பால் பண்ணை வைப்பதற்காக எருமை மாடுகளும், பசு மாடுகளும் வாங்கி பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் சந்தையில் வாங்கிய ஒரு எருமை மாடு கடந்த 10ம் திகதி மதியம் ஒரு கன்றுகுட்டியை ஈன்றது.கன்று குட்டியை கண்ட அவர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். காரணம் அக்கன்றுக் குட்டி வெள்ளை நிறத்தில் இருந்தது தான். இது குறித்து அவர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கவே அப்பகுதியே திரண்டு வந்து கன்றுக்குட்டியை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இந்த அதிசய கன்றுக்குட்டி குறித்து அப்பகுதியினர் கூறும்போது கடந்த 1930 மற்றும் 1950ம் ஆண்டில் வெளிநாட்டில் மட்டுமே இது போன்று கன்றுக்குட்டி பிறந்ததாகவும் இந்தியாவில் இதுதான் முதல் முறை என்றும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கேரள அரசு இக்குட்டியை வளர்க்க உதவி செய்ய முன்வந்துள்ளது. இந்த அதிசய கன்றுக்குட்டிக்கு உரிமையாளர் அல்பீனா என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த கன்றுக்குட்டியை ரூ.3லட்சம் வரை கொடுத்து விலைக்கு வாங்க பலர் ஷர்புதீனை தேடி வந்த வண்ணம் உள்ளனர்.
No comments
Post a Comment