Latest News

February 13, 2012

எரிபொருள் விலை: சூடுபிடிக்கும் மீனவர் போராட்டம்
by admin - 0


எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களுடன் இணைந்து அகில இலங்கை மட்டத்தில் மீனவர்களின் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக வட இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே போரி்னால் பாதிக்கப்பட்டிருந்து, படிப்படியாக மீன்பிடித் தொழிலை முன்னெடுக்க முயற்சிக்கின்ற தமக்கு திடீரென 35 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் விலையால் பலத்த அடி விழுந்துள்ளதாக வடபகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.இலங்கையில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் பெற்றொல் விலை 12 ரூபாயாலும் டீசல் விலை 31 ரூபாயாலும் மண்ணெண்ணெய் விலை 35 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டன.இந்த விலையேற்றத்தால் போக்குவரத்து, கடற்தொழில, தோட்டத் தொழில் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கும் அதிகமான சிறிய ரக படகு மீனவர்கள் எரிபொருள் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாக
இலங்கை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ஹேர்மன் குமார தமிழோசையிடம் தெரிவித்தார்.
‘வீண்செலவு’
சர்வதேச விடயங்களை விலை அதிகரிப்புக்கு காரணம் காட்டும் அரசாங்கம், பெருங் கொண்டாட்ட நிகழ்வுகளுக்காக பெருமளவு பணத்தை வீணாக செலவு செய்துவிட்டு தொழிலாளர்களை சிரமத்தில் தள்ளுவதாகவும் ஹேர்மன் குமார சுட்டிக்காட்டினார்.
மீனவர்களுக்கு எரிபொருளை மானிய விலையில் தருவதாக அரசாங்கம் கூறுவதை நம்பமுடியாது என்றும் கடந்தகால அனுபவங்களை சுட்டிக்காட்டுவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.
மன்னார், யாழ்ப்பாணம், வன்னி என வட இலங்கை மீனவர்களையும் எரிபொருள் விலை கடுமையாகப் பாதித்துள்ளதால் வடபகுதி மீனவர்களையும் போராட்டத்தில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழோசையிடம் கருத்துத் தெரிவித்த வட மாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் எஸ். தவரட்ணம், மண்ணெண்ணெய்யை பெரும்பாலும் நம்பியிருக்கின்ற வடபகுதி மீனவர்கள், தேசிய மட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களுடன் இணைந்து தமது கோரிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கூறினார்.
இரான் மீதான சர்வதேசத்தின் தடைகளைக் காரணம் காட்டி அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரிப்பது மோசடி வேலை என இலங்கையின் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
« PREV
NEXT »

No comments