Latest News

February 23, 2012

கொள்ளையர்கள் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி சுட்டுக்கொன்றது என்பது முற்றிலும் தேவையற்ற ஒரு செயல்
by admin - 0


சென்னை வேளச்சேரியில் நேதாஜி சாலையில் ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் வங்கி கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து அ.மார்க்ஸ் கூறியதாவது,


கொள்ளையர்கள் 5 பேர் இருக்கிறார்கள். பெரிய போலீஸ் படை இருக்கிறது. ஒருத்தரைக் கூட உயிரோடு பிடிக்க முடியவில்லை என்று கூறுவதை நம்ப முடியாது. உயிரோடு பிடித்திருந்தால் கூடுதலாக சில தகவல்கள் கிடைத்திருக்கும்.


ஆங்கில பத்திரிகை ஒன்றில் இன்று (23.02.2012) ஒரு செய்தி வந்திருக்கிறது. பீகாரைச் சேர்ந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள். எப்படி தெரிந்தது என்றால், மகாராஷ்டிராவில் இதேபோல் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில், சுபோத் கான் சிங் என்ற இளைஞன் கூறியதாவது, நாங்கள் தான் கொள்ளையடித்தோம், தமிழ்நாட்டிலேயும் கொள்ளையடிக்கப்போகிறோம் என்று சொல்லியுள்ளான். அதை வைத்துதான் தமிழ்நாடு போலீசார் இதனை கண்டுபிடித்துள்ளனர். இவர்களை உயிரோடு பிடித்திருந்தால் மேலும் தகவல்கள் கிடைத்திருக்கும். எதிர்கால திட்டம் குறித்தும் கண்டுபிடித்திருக்கலாம்.


ஒருவரை கைது செய்யப்போகும்போது, அவர் கைதாக மறுத்தால் அவர்கள் மீது வன்முறையை பிறயோகிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அந்த வன்முறை எதுவரைக்கும் போகலாம் என்றால் கொலை செய்கிற அளவுக்கு வரைக்கும் போகலாம். ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் 46ல் 3வது பிரிவு, யாரை இதுபோல் கொல்லலாம் என்றால், பிடிக்கச் சென்ற குற்றவாளிகள் மரண தண்டனை, ஆயுள் தண்டனைக்குரிய குற்றங்களை செய்திருந்தார்களேயானால் அவர்களை நீங்கள் கொல்லலாம்.

வங்கிக் கொள்ளை என்பது மரண தண்டனைக்குரிய குற்றம் அல்ல. அந்த வகையில் அவர்கள் கைதாக மறுத்தால், அவர்களை சுற்றி வளைத்து பணிய வைத்து கைது செய்வதே சரியானதாகும். அவர்களை சுட்டுக்கொன்றது என்பது முற்றிலும் தேவையற்ற ஒரு செயல்.


கொள்ளையர்கள் தங்களை நோக்கி சுட்டதால், பொதுமக்களை பாதுகாக்கவும், தங்களை பாதுகாக்கவும் பதிலுக்கு சுட்டோம் என்று போலீசார் தெரிவித்துள்ளார்கள்.போலீசார் எப்பவுமே என்கவுண்டரில் அப்படித்தான் சொல்வார்கள். அவர்கள் சுட்டார்கள், பதிலுக்கு நாங்கள் சுட்டோம் என்று சொல்லி இரண்டு போலீசாரை ஆஸ்பத்திரியில் இரண்டு நாள் படுக்க வைத்து கொண்டுவந்துவிடுவார்கள்.


ஆனால் இதுதொடர்பாக இதுவரைக்கும் விசாரணை செய்யப்பட்ட எல்லா என்கவுண்டர்களேயும், நீதிமன்றம் தலையிட்ட எல்லா என்கவுண்டர்களேயும் போலீசின் இந்த கதை பொய் என்றே நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கேயும் அதுதான். ஏன் என்றால், அதே ஆங்கிலப் பத்திரிகையில் இன்னொரு விஷயமும் வந்துள்ளது. இந்த கொள்ளையர்கள் திங்கள் கிழமையைத்தான் தேர்வு செய்கிறார்கள். சென்னை கொள்ளை சம்பவமும் திங்கள்கிழமையில் நடந்துள்ளது. அதேபோல் சிசிடிவி இல்லாத தேசிய வங்கி கிளையைத்தான் அவர்கள் தேர்வு செய்கிறார்கள். 3வதாக கொள்ளையர்கள் பொம்மை துப்பாக்கியை வைத்துதான் மிரட்டுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படியிருக்க உண்மையிலேயே இவர்களிடம் துப்பாக்கி இருந்ததா என்று சந்தேகம் எழுகிறது.


இவர்களுடையே வழக்கம் என்னவென்றால், திங்கள் கிழமையில் திருடுவது, சிசிடிவி இல்லாத தேசிய வங்கி கிளையை தேர்வு செய்வது, பொம்மை துப்பாக்கியை வைத்து மிரட்டுவது. அப்படியிருக்கும்போது இவர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள், மிரட்டினார்கள் என்பதை நம்ம முடியவில்லை.


என்கவுண்டர் விஷயத்தில் தமிழக அரசு 2007 ஆகஸ்ட் 8ல் ஒரு நெறிமுறைகளை வழங்கியிருக்கிறது. அந்த நெறிமுறைகளின்படி நீதிமன்றம் விசாரணை நடத்தப்பட வேண்டும், அந்த நீதிமன்ற விசாணையில் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றவர்கள் சொல்லக்கூடிய சந்தேகங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு பரிசீலிக்க வேண்டும். என்கவுண்டரில் ஈடுபட்ட போலீசாருக்கு ஊக்க பரிசுகள், பதவி உயர்வுகள் கொடுக்கக் கூடாது. உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள நெறிமுறைகளின்படி தற்காப்புக்காக கொலை செய்தல், போலீசாராகவும் இருக்கலாம் தனி மனிதனாகவும் இருக்கலாம். கொலை செய்தாலும், கொலை செய்ய அனுமதி இருந்தாலும் அந்த கொலையை, கொலை குற்றமாகவே பதிவு செய்து, விசாரித்து இந்திய சாட்சி சட்டம் 105வது பிரிவின்படி தாங்கள் தற்காப்புக்காகத்தான் கொலை செய்தோம் என்பதை நிரூபித்த பிறகுதான் குற்றத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.


இப்போது எங்களது கோரிக்கை என்னவென்றால், இது ஒரு வழக்கம்போல பொய்யான என்கவுண்டராக இருக்க வேண்டும். அதனால் பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியின் கீழ் நீதிவிசாரணை செய்ய வேண்டும். என்கவுண்டரில் பங்கு பெற்ற அதிகாரிகள் மீது, கொலை வழக்குப் பதிவு செய்து, இந்திய சாட்சி சட்டத்தின்படி தாங்கள் தற்காப்புக்காகத்தான் கொலை செய்தோம் என்பதை நிரூபித்த பிறகுதான் குற்றத்தில் இருந்து விடுவிக்கப்படவேண்டும். தமிழக அரசின் 2007 ஆகஸ்ட் 8 நெறிமுறைகளின்படி அவர்களுக்கு ஊக்க பரிசு, பதவி உயர்வுகள் கொடுக்கக் கூடாது என்றார்.
« PREV
NEXT »

No comments