Latest News

February 12, 2012

வட, கிழக்கு மக்களின் வயிற்றில் அடித்துள்ள எரிபொருள் விலையேற்றம் - அரியம் எம்பி விமர்சனம்
by admin - 0


இலங்கை அரசாங்கத்தால் இன்றைய தினம் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருட்களின் விலையேற்றம், ஏற்கனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கே கூடுதல் வேதனையாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் திடீர் எரிபொருள் விலையேற்றம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இவ்வாறான விலையேற்றங்கள் அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கையாகவே இதனை கருத வேண்டியுள்ளது.

குறிப்பாக ஏற்கனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் வட, கிழக்கு மக்களுக்கே இது கூடுதல் வேதனையாகும்.

ஏனெனில் பாமரமக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெயின் விலையினையே அரசாங்கம் கூடுதலாக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலையில் வடகிழக்கில் ஏற்கனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இது மிகவும் வேதனையான விடயம்.

அவர்களுக்கு மின்சார வசதியில்லை, வருமானம் மிகவும் குறைவு, தங்களது தேவைகளை நிறைவு செய்வதற்கு அவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டியுள்ளது.

எனவே இவர்களுக்கு இந்த எரிபொருட்களின் விலையெற்றம் மேலும் பொருளாதார சுமைகளையே உருவாக்கியுள்ளது.

கடந்த காலங்களில் யுத்தத்தை காரணம்காட்டி வட, கிழக்கு தமிழ் மக்கள் மீது பொருளாதார தடைகளை உருவாக்கிய அரசாங்கம் இப்போது ஈரான் நாட்டின் பொருளாதாரத் தடையை காரணம் காட்டி இலங்கை மக்கள் மீது குறிப்பாக வட, கிழக்கு தமிழ் மக்கள் மீது பொருளாதார சுமையினை உருவாக்கியுள்ளது.

மொத்தத்தில் இந்த எரிபொருட்களின் விலையேற்றம் அனைத்து துறைகளிலும் மக்களை பாதிக்கவே செய்யும்.

எனவே அரசாங்கத்தின் இது போன்ற நடவடிக்கை குறித்து எதிர்காலத்தில் மக்களே தீர்மானிப்பர் என்றார்.
« PREV
NEXT »

No comments