"கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்துக்கு வெளிநாட்டு பணம் வருவதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறி இருப்பது அவதூறானது," என்று போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.
அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு பிரதமர் மன்மோகன்சிங் அளித்த பேட்டியில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் கூடங்குளம் போராட்ட குழுவினருக்கு பணம் கொடுத்து, போராட்டத்தை தூண்டி விடுவதாகவும், இந்திய எரிசக்தி துறை வளர்ச்சியை தடுக்கும் வகையில் அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் சதி செய்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
பிரதமரின் குற்றச்சாட்டு குறித்து கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது:
கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறி இருப்பது அவதூறான தகவல் ஆகும். மக்கள் பிரதிநிதியான அவர் இவ்வாறு கூறி இருக்கக் கூடாது.
போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட எந்த வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களும் பணம் தரவில்லை. வெளிநாட்டில் இருந்து 5 பைசா கூட வரவில்லை. கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள் அளிக்கும் பணத்தை கொண்டுதான் போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய மந்திரி நாராயணசாமி இதே குற்றச்சாட்டுகளை கூறிய போது, நாங்கள் இவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் பிரதமர் கூறி இருப்பது கண்டனத்துக்குரியது.
எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து 3 நாட்களில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் வெளியிட வேண்டும். இல்லை என்றால் பிரதமர் மன்மோகன்சிங் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். இது பற்றி வக்கீல்களோடு ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.
No comments
Post a Comment