Latest News

February 24, 2012

சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிப்பதற்கு அனைத்து பிரஜைகளுக்கும் உள்ள உரிமைகளுக்கு மதிப்பளிக்குக-வெள்ளை மாளிகை
by admin - 0

சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிப்பதற்கு அனைத்து பிரஜைகளுக்கும் உள்ள உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு வெள்ளை மாளிகை இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.


இலங்கையில் இறைமை, நீதி, சிறந்த நிர்வாகம் மற்றும் ஜனநாயகம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை விடுவிக்குமாறு கோரி, முன்வைக்கப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு வெள்ளை மாளிகை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட மனித உரிமைகள் அறிக்கையில், சரத் பொன்சேக்கா ஒரு அரசியல் சிறைக்கைதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா வழிநடத்தலில் அவரின் அரசியல் தலைவர்களி்ன் தலைமையில், எல்.ரீ.ரீ.ஈயினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்ற போதிலும், சரத் பொன்சேக்காவை குற்றவாளியாக அடையாளப்படுத்தி, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை அந்த அறிக்கையின் மூலம் நினைவுகூரப்பட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கையின் சட்டம் மற்றும் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதற்குள்ள உரிமைக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகையின் அறிக்கையின் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments