என் தாய், தனது பள்ளி மாணவர்களை என் பிள்ளைகள் என்றுதான் கூறுவார். வாரத்தில் 6 நாட்களும் அவர் தனது பள்ளிப் பிள்ளைகளுடன்தான் கழித்தார். ஒரு நாள் மட்டுமதான் எங்களுடன் இருந்தார். எங்களை விட தனது பள்ளிப் பிள்ளைகளைத்தான் அவர் அதிகம் நேசித்தார் என்று சென்னை பள்ளியில் மாணவனால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள் உருக்கமாக கூறியுள்ளார்.
சென்னை பாரிமுனையில் உள்ள செயிண்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கடந்த 9-ந்தேதி மதியம் தனது மாணவனால் வகுப்பறையில் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக 9வது வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
நாட்டையே அதிர வைத்து விட்டது இந்த கொடூரக் கொலைச் சம்பவம்.இன்று பள்ளியில் ஆசிரியை உமா மகேஸ்வரிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு ஆசிரியையின் படத்திற்கு மலர் அஞ்சலியும், கண்ணீர் அஞ்சலியும் செலுத்தினர்.
நிகழ்ச்சியில் ஆசிரியையின் தாயார் அமிர்தம், கணவர் ரவிசங்கர், மகள்கள் சங்கீதா, ஜனனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி பேசுகையில்,
இந்த துயரமான சம்பவம் இனி எந்த காலத்திலும் நடக்க கூடாது. ஆசிரியைக்கு என் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நாம் ஒரு நல்ல ஆசிரியரை இழந்து விட்டோம். இது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த தருணத்தில் மாணவர்கள் ஒரு உறுதிமொழி எடுக்க வேண்டும். நாம் சிறந்த மாணவனாக, பண்புள்ள மாணவனாக வர வேண்டும் என்பதுதான். இதுதான் ஆசிரியை உமா மகேஸ்வரிக்கு நாம் செய்யும் நன்றி கடனாக இருக்கும் என்றார்.
ஆசிரியை உமா மகேஸ்வரியின் மூத்த மகள் சங்கீதாவின் பேச்சுதான் அனைவரையும் உருக வைத்து கண்ணீர் விட வைத்தது.
அவர் பேசுகையில்,
எல்லா மாணவர்களும் கடவுளுக்காக இறக்க தயாராக இருக்க வேண்டும். என் அம்மா வாரத்தில் 6 நாள் உங்களுடன்தான் இருப்பார்கள். ஒரு நாள் தான் எங்களை பார்க்க வருவார். அவர் எங்களை விட உங்களைத்தான் அதிகம் நேசித்தார். என்னுடன் படிக்கும் பிள்ளைகள் எல்லாம் என் பிள்ளைகள் என்பார்.
ஆசிரியர் கண்டித்தாலும், திட்டினாலும் மாணவர்கள் கோபப்படக்கூடாது. அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்கள். நான் ஒரு மாணவியாக சொல்கிறேன். ஆசிரியர்கள் அடிப்பதும், கண்டிப்பதும் நமது நன் மைக்காகத்தான் என கருத வேண்டும். ஆசிரியர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களிடம் பழகுகங்கள். அவர்கள் கண்டிப்பதை விரோதமாக கருதாதீர்கள் என்று அவர் பேச பலரும் கண் கலங்கினர்.
நிகழ்ச்சியில், ஆசிரியையின் மகள்கள் சங்கீதா, ஜனனி ஆகியோரின் மேல்படிப்பு உதவிக்காக பள்ளி சார்பில் அவர்களது பெயரில் ரூ. 5 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
No comments
Post a Comment